×

5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில் போபாலில் ‘இந்தியா’ கூட்டணியின் 4வது கூட்டம்?: தலைவர்களின் பேரணி, தொகுதி பங்கீடு குறித்து முக்கிய முடிவு

போபால்: மத்திய பிரதேசம் உள்ளி 5 மாநில தேர்தல்கள் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணியின் 4வது கூட்டம் போபாலில் நடைபெற உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் தலைவர்களின் கூட்டு பேரணி, தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அடுத்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. ‘இந்தியா’ முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டுப் பேரணிகளை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்திற்குப் பிறகு, சிவசேனா தலைவர் (உத்தவ்) உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் தேவையில்லை. பரஸ்பர சம்மதத்துடன் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளோம். கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து இந்தக் குழுவின் உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள். அதுகுறித்து அந்தந்த கட்சித் தலைவர்களிடம் தெரிவிப்பார்கள்’ என்று கூறினார். இந்நிலையில் ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது ஆலோசனை கூட்டம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூறுகையில், ‘போபாலில் 4வது ஆலோசனைக் கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.

தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதேநேரம் அக்டோபர் முதல் வாரத்தில் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. மத்திய பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மாநிலத்தில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்த சில தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மும்பையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சில தலைவர்கள், டெல்லியில் 4வது கூட்டம் நடத்தலாம் என்றனர். எனவே அடுத்த சில நாட்களில் போபாலில் 4வது கூட்டம் நடைபெறுவது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும். 4வது கூட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, கூட்டணி தலைவர்களின் கூட்டு பேரணி தேதிகள் குறித்து ஆலோசிக்கப்படும்’ என்று கூறினர்.

 

The post 5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில் போபாலில் ‘இந்தியா’ கூட்டணியின் 4வது கூட்டம்?: தலைவர்களின் பேரணி, தொகுதி பங்கீடு குறித்து முக்கிய முடிவு appeared first on Dinakaran.

Tags : India ,Bopal ,India Alliance ,Madhya Pradesh ,alliance ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி