
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று டெல்லியில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக புறப்பட்டு செல்கிறார்.
தலைநகர் டெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தரவுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 5 நாட்கள் பயணமாக இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு செல்கிறார். முதலில் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரல்ஸ் நகருக்குச் செல்லும் ராகுல் காந்தி, 7ம் தேதி ஐரோப்பிய ஆணையத்தின் எம்பிகளை சந்திக்கிறார். பின்னர் 8ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் அவர், அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாடுகிறார்.
மறுநாள் (9ம் தேதி ) பிரான்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார். அதன்பின் வரும் 10ம் தேதி நார்வேயின் ஆஸ்லோ நகருக்கு செல்லும் ராகுல், இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி ராகுல்காந்தி இந்தியா திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த 3ம் தேதியே ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது தாய் சோனியா காந்திக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியதால், ராகுல் காந்தியின் பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ராகுல் காந்தி ஐரோப்பா பயணம்: பல்கலை. மாணவர்களை சந்திக்கிறார் appeared first on Dinakaran.