×

கேரளா உட்பட 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் 7 பேரவை தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு: பாஜக – ‘இந்தியா’ கூட்டணி இடையே முதல் போட்டி

லக்னோ: உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட், கேரளா, மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதி, திரிபுரா மாநிலம் போக்ஸாநகர் மற்றும் தான்பூர் தொகுதிகள், உத்தர பிரதேச மாநிலம் கோஷி, உத்தரகண்ட் மாநிலம் பாகேஸ்வர், கேரள மாநிலம் புதுப்பள்ளி, மேற்குவங்க மாநிலம் துக்புரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 7 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேற்கண்ட 7 தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா‘ கூட்டணி வேட்பாளருக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் முதல் முறையாக நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 6 மாநிலங்களில் இன்று நடைபெறும் 7 தொகுதிகள் வாரியாக பார்க்கும் போது, கடந்த 2021 தேர்தலில் துக்புரி தொகுதியை பாஜக கைப்பற்றியது. அத்தொகுதி எம்எல்ஏ பிஷு படா ரே மறைந்ததையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கே பாஜக, திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

திரிபுராவின் தன்பூர், போக்ஸாநகர் தொகுதிகளில் மா.கம்யூ மற்றும் ஆளும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இங்கே காங்கிரஸ், திப்ரா மோத்தா கட்சிகள் போட்டியிடவில்லை. பாகேஸ்வர் தொகுதி பாஜக எம்எல்ஏ சந்தன் ராம் தாஸ் மறைவால், அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் பாஜக – காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது. தும்ரி தொகுதியில் அமைச்சர் ஜகநாத் மஹதோ மறைவால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஏஜேஎஸ்யு கட்சியின் (பாஜக கூட்டணி) யசோதா தேவியும், இந்தியா கூட்டணி சார்பில் மறைந்த மஹதோவின் மனைவி பீபி தேவியும் போட்டியிடுகின்றனர்.

கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டியின் மறைவால், புதுப்பள்ளி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. அவரது மகன் சாண்டி உம்மன், பாஜக சார்பில் லிகின்லால், மா.கம்யூ சார்பில் சி.தாமஸ் ஆகியோர் களம் கண்டுள்ளனர். கோஷி தொகுதி சமாஜ்வாதி எம்எல்ஏ தாரா சிங் சவுகான், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால், அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அதே தொகுதியில் பாஜக சார்பில் தாரா சிங் சவுகான் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி சுதாகர் சிங்கை களமிறக்கியுள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

 

The post கேரளா உட்பட 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் 7 பேரவை தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு: பாஜக – ‘இந்தியா’ கூட்டணி இடையே முதல் போட்டி appeared first on Dinakaran.

Tags : Kerala ,BJP ,India ,alliance ,Lucknow ,Uttar Pradesh ,Jharkhand ,Tripura ,Uttarakhand ,West Bengal ,India' alliance ,Dinakaran ,
× RELATED கேரளாவில் எதிர்க்கட்சியினர்...