×

வரும் சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேச பாஜக முதல்வருக்கு கல்தாவா?: சிவராஜ் சிங் சவுகான் பரபரப்பு பேட்டி

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சிவராஜ் சிங் சவுகான் அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல்வர் வேட்பாளரை கட்சித் தலைமை முடிவு செய்யும். ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 2020ல் பாஜகவில் சேர்ந்தார். அவரும் அவருடன் வந்தவர்களும் பாலில் சர்க்கரை சேர்த்தது போல பாஜகவில் உள்ளனர்.

மத்திய பிரதேச பாஜகவில் மூன்று பிரிவுகள் (நராஜ், மகாராஜ் (குவாலியர் அரச குடும்பத்தின் சிந்தியா வாரிசு), சிவராஜ்) உள்ளதாக கமல்நாத்தும், திக்விஜய் சிங்கும் (காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள்) கூறுகிறார்கள். நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவதால், ​அவர்கள் தங்களது தூக்கத்தை இழந்துள்ளனர். அப்படியே அவர்கள் தூங்கினாலும் அவர்களது கனவிலும் நாங்கள் தோன்றுகிறோம்’ என்றார். இருந்தும் ஜோதிராதித்ய சிந்தியாவை மத்திய பிரதேச பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருவதால், அம்மாநில பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவராஜ் சிங் சவுகானின் பேட்டி மேலும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post வரும் சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேச பாஜக முதல்வருக்கு கல்தாவா?: சிவராஜ் சிங் சவுகான் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,BJP ,Chief Minister Kaldawa ,Shivraj Singh Chouhan ,Bhopal ,ministerial ,Madhya Pradesh Assembly elections ,Chief Minister Kalta ,Shivraj Singh Chauhan ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்..!!