×

வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாநகர சாலைகள், சென்னை மெட்ரோ ஆகிய கோட்டங்களின் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்கள்.

நெடுஞ்சாலைத்துறை நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகள் திருவான்மியூர் – அக்கரை ஆறுவழி சாலையாக அகலப்படுத்தும் பணி சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தக்காலத்திற்குள் பணிகளை முடிக்க செய்ய வேண்டியது, சம்மந்தப்பட்ட பொறியாளர்களின் முக்கிய பணியாகும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் உள்ளதால், வடிகால்களில் அடைப்புகளை நீக்கி மழைநீர் எளிதாக செல்ல வழிவகை செல்ல வேண்டிய பணிகளை உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

ஒப்பந்ததாரர்களின் பணிகள் அனைத்தும், 30.9.2023க்குள் முடிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒப்பந்தாரர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் நிலுவையில் உள்ள நிலஎடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மின் தளவாடங்களை அகற்றும் பணி, குடிநீர்குழாய்களை அகற்றும் பணி போன்றவற்றை தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும். நிலஎடுப்புப் பணிகளில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு, காலக்கெடு நிர்ணயித்து குறிப்பிட்ட காலத்திற்குள் நிலஎடுப்புப் பணிகளை முடிக்க, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், ஒப்பந்ததாரர்களை அழைத்து, அவர்களிடம் காலக்கெடு நிர்ணயித்துள்ள விவரங்களை தெரிவித்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்கள்.

மழைநீர் வடிகால் பணிகளை தொடர்ந்து, பெரிய மேற்கத்திய சாலை, உள்வட்ட சாலை, வளசரவாக்கம் – (ராமாபுரம் வழி) வள்ளுவர் நகர் சாலை, பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி அருகில் கூடுதல் சிறுபாலப் பணிகள், குரோம்பேட்டையில் கூடுதல் சிறுபாலப் பணி, ஒட்டியம்பாக்கம் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம், மேடவாக்கம் –சோழிங்கநல்லூர் – குடிமியாண்டி தோப்பு சாலையில் உயர்மட்ட பாலப் பணி போன்ற அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த ஆய்வுக்கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஐ.ஏ.எஸ்., திட்ட அலுவலர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்., நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், சென்னை மெட்ரோ தலைமைப் பொறியாளர் இளங்கோ, மற்றும் கோட்டப் பொறியாளர்ளும், துறை சார்ந்த அலுவலர்களும் பங்குப் பெற்றார்கள்.

The post வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,A. V. Velu ,North East Monsoon ,Chennai ,Highways Department ,A.V.Velu ,Dinakaran ,
× RELATED அமைச்சர் எ.வ.வேலு தகவல்...