
உதகை: ஒன்றிய அரசின் அலட்சியத்தால் தொடர்ந்து விலை வீழ்ச்சியை சந்தித்து வரும் பசும் தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி 80,000 விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 4 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விலை பயிராக 80% நிலப்பரப்பில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தேயிலை தொழில் கடந்த 2000வது ஆண்டு வரை லாபம் கொழிக்கும் தொழிலாக இருந்து வந்தது அப்போது. ஒரு கிலோ பசும் தேயிலைக்கு ரூ.20 கொடுத்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் ஒன்றிய அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக நீலகிரி பசும் தேயிலைக்கு படிப்படியாக விலை குறைய தொடங்கியது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பசும் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2011ம் ஆண்டு பசும் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவு தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை.
அதே போல தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை பரிந்துரை செய்த ரூ.22 உடன் ரூ.11 சேர்த்து ஒரு கிலோ பசும் தேயிலைக்கு ரூ.33 வழங்குமாறு எம்.எஸ்.ஸ்வாமிநாதன் முன்வைத்த யோசனையையும் ஒன்றிய வர்த்தக துறை கண்டுகொள்ளவில்லை. இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் கணிசமாக ஆண்டுக்கு ரூ.12 கொடியே 80 லட்சம் கிலோ தேயிலை தூளை நீலகிரி மாவட்ட சிறு குறு தேயிலை விவசாயிகள் உற்பத்தி செய்து வழங்குகின்றனர்.
தற்போது ஒரு கிலோ பசும் தேயிலை உற்பத்தி செய்ய ரூ.20 வரை செலவாகும் நிலையில் தென்னிந்திய தேயிலை வாரியமோ ரூ.15 மட்டுமே நிர்ணயம் செய்வதால் உற்பத்தி செலவுக்கான தொகை கூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதை அடுத்து 80,000க்கு மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக தேயிலை பறிக்காமல் வேலை நிறுத்தம் செய்ததோடு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்தால் நாள் ஒன்றிற்கு ரூ.2 லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன் ரூ.75 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் துணை தொழில்கள் உள்ளிட்ட தேயிலை துறையில் சுமார் 4 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக உயர்நீதிமன்றம் மற்றும் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் குழுவின் பரிந்துரை படி கிலோவிற்கு ரூ.33 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே இந்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
The post ஒன்றிய அரசின் அலட்சியத்தால் பசுந்தேயிலை விலை வீழ்ச்சி: விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.