×

“பாரத ஜனாதிபதி என்று அழைப்பிதழ் ” : இந்தியா என்ற நமது நாட்டின் பெயரை பாரதம் என மாற்ற ஒன்றிய அரசு திட்டம்!!

டெல்லி : இந்தியா என்ற நமது நாட்டின் பெயரை பாரதம் என மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் களம் இறங்கி உள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் முதல் கூட்டம் நடந்தது. அதை தொடர்ந்து பெங்களூருவில் 2வது கூட்டம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A. கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் பிறகு நாட்டின் பெயரை பாரத் என மாற்ற பாஜக தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் இந்தியா என இருந்ததை பாரத் என மாற்றியுள்ளார் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா.

பாரத் என அழைப்பதில் பெருமை கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்தியா என சொல்வதை விட பாரதம் என்று அழைப்பதே சரியானது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் பேசியிருந்தார்.இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் இந்தியா என்ற சொல்லை தவிர்த்து பாரதம் என குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், வலிமையான, திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி என ஆளுநர் கூறியுள்ளார். இந்த நிலையில் ஜி20 மாநாட்டிற்கான இரவு விருந்து அழைப்பிதழில் பாரத ஜனாதிபதி என்று ராஷ்ட்ரபதி பவன் குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ராஷ்ட்ரபதி பவன் அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்றே குறிப்பிடப்படும் என்றும் அரசியல் சட்டம் கூறும் மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற கருத்து ஒன்றிய அரசால் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

பல தலைவர்களின் கருத்துக்கள் பின்வருமாறு..

*பாஜக எம்பி ஹர்னாத் : ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரை அழைப்பதில் அவமானமாக உள்ளது.

*பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா: நாட்டுக்கு பெருமை அளிக்கும் அனைத்திற்கும் காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

*மதுரை எம்பி சு. வெங்கடேசன் :இந்தியா என்ற பாரதம் என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது.

*காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி : தேர்தல் தோல்வி நிச்சயம் என்பதால் நாட்டின் பெயரையே மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.

The post “பாரத ஜனாதிபதி என்று அழைப்பிதழ் ” : இந்தியா என்ற நமது நாட்டின் பெயரை பாரதம் என மாற்ற ஒன்றிய அரசு திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : President of ,Union Government ,India ,Bharat ,Delhi ,President of India ,Dinakaran ,
× RELATED சீனாவுக்கு முக்கியத்துவம்: இந்திய...