×

திருமணவரம் தரும் ஆலயங்கள்

  • சென்னை பரங்கிமலை ரயில்நிலையம் அருகிலுள்ள நந்தீஸ்வரர் ஆலயத்தில் நந்தியம்பெருமானுக்கு தொடர்ந்து 5 பிரதோஷங்கள் இரு ரோஜாமாலையை வாங்கி சாத்தினால் திருமணத் தடை நீங்கிவிடுகிறது.
  • சென்னை – செங்கல்பட்டு வழியில் உள்ள சிங்கபெருமாள் ஆலயத்தில் நரசிம்மர் த்ரிநேத்ரதாரியாய் அருள்கிறார். அந்த மூன்றாவது கண்ணை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லா தடைகளும் விலகி, திருமணம் கைகூடுகிறது. விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் உள்ள சந்தோஷிமாதாவை வெள்ளிக்கிழமைகளில் தரிசித்தால் திருமணவரம் பெறலாம்.
  • சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் உள்ள மயூரவல்லித் தாயாருக்கு வெள்ளிக்கிழமை வில்வதளங்களால் ஸ்ரீசூக்தம் சொல்லி அர்ச்சனை செய்தால் மனநிறைவாகத் திருமணம் நடைபெறுகிறது.
  • தாம்பரம் – காஞ்சிபுரம் பாதையில் உள்ள முடிச்சூர் பிரம்ம வித்யாம்பிகை ஆலயத்தில் கொடுக்கப்படும் கொம்பு மஞ்சளை அம்பிகையின் சந்நதியில் கட்டி பிரார்த்தனை செய்தால் தடைகள் தகர்கின்றன; திருமணம் நிறைவேறுகிறது.
  • மயிலாடுதுறை, கீழையூர் கடைமுடிநாதர் ஆலய அபிராமி அம்மனுக்கு மஞ்சள் கயிற்றில் கோத்த மஞ்சள் தாலியை அணிவித்து, அதை பிரசாதமாகப் பெற்று கன்னிப் பெண்கள் அணிந்து, பிறகு கழற்றி வீட்டில் வைத்து பூஜை செய்ய விரைவில் அவர்கள் மணமுடிக்கிறார்கள். திருமண தோஷம் உள்ளவர்கள் திருச்செந்தூரில் நாழிக்கிணற்றில் நீராடி பின் கடலில் குளித்து செந்தூரானை வணங்கி, குகை லிங்கத்தை தரிசித்தால் தோஷம் நீங்கி திருமணம் நிச்சயமாகிறது.
  • ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள உத்தரகோசமங்கை மங்களநாதரையும், சுயம்பு பாணலிங்கத்தையும் வணங்கினால் திருமணத்திற்கு எந்தத் தடையும் குறுக்கே நிற்காது.
  • மதுரை – சோழவந்தான் பாதையில் உள்ள திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்திலுள்ள 16 கர வனதுர்க்கை க்கு பூமாலை அணிவித்து, அதை பிரசாதமாகப்பெற்று அணிந்து, பின் வீட்டில் வைத்து பூஜித்துவர விரைவில் கெட்டி மேளம் கொட்டும்.
  • தெய்வானைக்கும் முருகனுக்கும் திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் கோயிலை திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபட, ஒரு வருடம் கழித்து தலைதீபாவளி கொண்டாடலாம்.
  • கோபிசெட்டிப்பாளையம் முருகன்புதூரில் அருளாட்சி செய்யும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருமண வரம் அருள்கிறாள்.
  • திருமணஞ்சேரியில் அருளும் உத்வாகநாதரையும் கோகிலாம்பிகையையும் வழிபட்டு அத்தல கல்யாணசுந்தரருக்கு மாலை சாத்தி வழிபடுவோர் விரைவில் மணமாலை சூடுகிறார்கள். திருமணதோஷம் உள்ளவர்கள் திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி கோயிலில் கல்வாழை மரத்திற்கு தாலி கட்டி 12 முறை வலம் வந்து பரிகார பூஜை செய்தால் 3 மாதங்களுக்குள் மங்கல நாண் கழுத்தை அலங்கரிக்கும்.
  • கடலூர், நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் போகிப் பண்டிகையன்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலையைப் பிரசாதமாகப் பெறும் கன்னியர் சீக்கிரமே திருமண பந்தம் காண்கிறார்கள்.
  • கும்பகோணம் ஒப்பிலியப்பன், மார்க்கண்டேய முனிவரின் மகளாகப் பிறந்த பூமிதேவியை மணம் புரிந்ததால் இத்தலம் திருமணவரம் அருள்வதில் நிகரற்றது.
    பிருகு மகரிஷியின் தவத்திற்கு மெச்சி அவர் மகளான கோமளவல்லியை சாரங்கபாணியாக பெருமாள் மணந்த தலம் கும்பகோணத்தில் உள்ளது. இவ்விருவரும் திருமண வரமருளும் தயாபரர்கள்.
  • மேதாவி மகரிஷியின் மகளான வஞ்சுளவல்லியை, நம்பியாக பெருமாள் தன் ஐந்து வியூக சக்திகளுடன் கல் கருடனின் துணையோடு திருமணம் புரிந்த தலம் நாச்சியார் கோயில். திருமணக் கோலத்தில் அருளும் இந்த தம்பதி, பக்தர்களுக்குக் கல்யாண மாலை அணியும் பாக்கியம் நல்குகிறார்கள்.
  • நந்த சோழனின் மகளான கமலவல்லியாக மகாலட்சுமி பிறந்து, அரங்கனை உறையூரில் மணம் புரிந்தாள். இந்த அன்னையை வேண்டிக்கொண்டால் திருமண அழைப்பிதழை உடனே அச்சடிக்கும் வரம் அருள்வாள்.
  • கன்னியாகுமரிக்கு அருகே, வேளிமலை குமாரகோயில், வள்ளி தினைப்புனம் காத்தபோது முருகன் அவளை காதலித்து கரம் பிடித்த தலமாகும். உயரமான அர்ச்சாவதாரங்களாகத் திகழும் வள்ளியும், முருகனும் தம் பக்தர்களின் திருமணத்திற்கும் அதற்குப் பிறகும் காதல் வாடாதிருக்க அருள்கிறார்கள்.
  • ஆகாசராஜனின் புதல்வியாக பிறந்த பத்மாவதியை ஸ்ரீனிவாசன், திருமலையில் திருமணம் செய்து கொண்டர். 365 நாட்களும் இங்கு மலையப்ப சுவாமிக்கு பக்தர்களால் கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருமணம் மட்டுமல்லாமல் பிற எல்லா வரங்களையெல்லாம் வாரி வழங்கும் கருணாமூர்த்தி, இந்த மலையப்ப சுவாமி.

The post திருமணவரம் தரும் ஆலயங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது?