×

சிவகங்கை மாவட்டத்தில் 145 விவசாயிகளுக்கு ₹3.07 கோடியில் மானிய விலை வேளாண் இயந்திரங்கள்: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

திருப்புத்தூர், செப். 5: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் 145 விவசாயிகளுக்கு ரூ.3.07 கோடியில் மானிய விலையிலான பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் இயந்திரங்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஆஷா அஜித் தலைமை வகித்தார். வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு, மானிய விலையிலான பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் இயந்திரங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கி பேசுகையில், கலைஞர் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளின் நலன் காக்கப்பட்டு வந்தது.

அச்சமயம் கடந்த 2006ம் ஆண்டுகளில் கலைஞர் அவர்களால் சுமார் 7,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அத்திட்டம் ஒன்றிய அரசிற்கும் மாதிரியாக திகழப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வழியில் விவசாய பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில், முதலமைச்சர் விவசயா தொழிலினை மேலை நாடுகளுக்கு இணையான நவீன தொழில் நுட்பங்களுடன் விவசாயிகளுக்கான எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார்.

இன்றைய தினம், (நேற்று) தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பவர் டில்லர், விசை களையெடுப்பான் உள்ளிட்ட வேளாண் கருவிகளை சென்னை தலைமைச்செயலகத்தில் விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்துள்ளார்கள்.அதனைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையி்ன் சார்பில், வேளாண்மை இயந்தியரமயமாக்கல் திட்டம் 2023-2024ன் கீழ் மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் விழா திருப்பத்தூர் மற்றும் மானாமதுரையில் சிறப்பாக நடைபெறுகிறது.

அதில் திருப்புத்தூரில் நடைபெறும் விழாவின் மூலம் 68 விவசாயிகளுக்கும், மானாமதுரையில் நடைபெறும் விழாவின் மூலம் 77 விவசாயிகளுக்கும் என மொத்தம் 145 விவசாயிகளுக்கு தலா ரூ.2,12,000/- வீதம் மொத்தம் 3,7,40,000/- மதிப்பீட்டில் மானிய விலையிலான பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறு விவசாயிகளுக்கு ரூ.85,000/- மானியத்தொகையும், பெரு விவசாயிகளுக்கு ரூ.70,000/- மானிய தொகையும் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த விவசாயிகளுக்கு ரூ.1,19,000/- மானியத்தொகையும் வழங்கப்படுகிறது. இதுபோன்று விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு அத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்கென துறை சார்ந்த அலுவலர்களை முறையாக அணுகி, பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திருப்புத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் .முத்துக்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ரேகா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய பெருங்குடி மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கை மாவட்டத்தில் 145 விவசாயிகளுக்கு ₹3.07 கோடியில் மானிய விலை வேளாண் இயந்திரங்கள்: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Sivagangai district ,Minister ,Periyakaruppan ,Tiruputhur ,Periyagaruppan ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்