×

9 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு திருவண்ணாமலையை சேர்ந்தவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

வேலூர், செப்.5: திருவண்ணாமலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண்ணை மீட்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு அனுமதி பெறாமல் இயங்கிய இல்லத்தில் தங்கியிருந்த மல்லி என்கிற பிரியாவை மீட்டு குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். சிறுமியின் தற்காலிக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி வேலூர் அண்ணா சாலையில் உள்ள அரசினர் பிற்காப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

பின்னர், பிரியா காட்பாடியில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து 10ம் வகுப்பு பயின்றார். தற்போது 19 வயதாகும் பிரியாவிடம் மாவட்ட குழந்தை நலக்குழுவினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கார்த்தி என்பவர் தன்னுடைய அண்ணன் இல்லையென்றும், தன்னுடைய பெற்றோர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தான் சிறுவயதில் இருக்கும்போது, வீட்டிலிருந்து தெரியாமல் வெளியில் வந்து விட்டதாகவும், யாரோ ஒரு பெண் ஒருவர் தன்னை சோளிங்கரில் இயங்கி வந்த தனியார் குழந்தை காப்பாகத்தில் சேர்த்து, கல்வி பயில வைப்பதாக கூறி இல்லத்தில் சேர்த்து விட்டார். அங்கு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தாகவும், அதன் பிறகு படிக்க வைக்காமல் வீட்டு வேலை வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்த கார்த்தி, தன் தங்கை பிரியாவை, என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சோளிங்கர் வட்ட சட்டப்பணிகள் குழுவிடம் மனு அளித்தார். இதற்கிடையில், பிரியா தன்னுடைய பெற்றோர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என தெரிவித்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே வந்தாக கூறினார். பின்னர் ஏழுமலை மற்றும் இளம்பெண்ணுக்கு கடந்த 2021ம் ஆண்டு மாவட்ட சட்டபணிகள் ஆணையம் மூலம் ‘டிஎன்ஏ சோதனை’ நடத்தப்பட்டது. முடிவில் பிரியாவின் தந்தை ஏழுமலை தான் என தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று ேவலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் பிரியாவை அவரது குடும்பத்தினருடன், மாவட்ட குழந்தை நல குழுவினர் ஒப்படைத்தனர். அப்போது அந்த இளம்பெண் பிரியா கூறுகையில், ‘9 வருடத்திற்கு முன் பெற்றோருடன் மாயமான நான் இப்போது குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு உதவி செய்த அதிகாரிகளுக்கு நன்றி’ என்றார்.

The post 9 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு திருவண்ணாமலையை சேர்ந்தவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Vellore Collector ,Vellore ,
× RELATED வீட்டிற்கு செல்லும் பாதையில் தடுப்பு...