×

ஷெனாய் நகர் ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த ₹25 ஆயிரம்

அண்ணாநகர்: ஷெனாய் நகர் ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த ₹25 ஆயிரத்தை, ரோந்து காவலர் மீட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அமைந்தகரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து ஏடிஎம்களை, தினமும் இரவு நேரத்தில் சுழற்சி முறையில் போலீசார் ஆய்வு செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமைந்தகரை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு காவலர் தமிழ்மணி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, ஷெனாய் நகரில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தின் மீது ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிந்தது.

அதை எடுத்து பார்த்தபோது, ரூ.25,000 கேட்பாராற்று இருப்பது தெரிந்தது. பணம் எடுத்த வாடிக்கையாளர்கள் மறந்து விட்டு சென்றார்களா என்று ஏடிஎம் வாசலில் காவலர் வெகு நேரமாக காத்திருந்தார். ஆனால் பணத்தை தேடி யாரும் வரவில்லை. இதையடுத்து, அந்த பணத்தை அமைந்தகரை காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார். இதனையடுத்து, போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று, ஏடிஎம்மில் பணத்தை எடுக்க வந்த நபர்களை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘இரவு நேரங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட்டை தடுக்க, அமைந்தகரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை இரவு நேரங்களில் சுழற்சி முறையில் ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆய்வில் ஏடிஎம் இயந்திரங்கள் சரியாக உள்ளதா என்று ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். ஏடிஎம் மையத்தில் ₹25 ஆயிரத்தை தவறவிட்டவர்கள் அதற்கான ஆதாரங்களை காட்டிவிட்டு பணத்தை பெற்று செல்லாம்,’’ என்றனர். ஏடிஎம் மையத்தில் கேட்பாராற்று கிடந்த பணத்தை, பத்திரமாக காவல் நிலையத்தில் ஓப்படைத்த ரோந்து காவலரை உயரதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் வெகுவாக பாராட்டினர்.

The post ஷெனாய் நகர் ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த ₹25 ஆயிரம் appeared first on Dinakaran.

Tags : Shenoy Nagar ATM centre ,Annanagar ,Shenai Nagar ATM center ,Shenoy Nagar ATM center ,Dinakaran ,
× RELATED அண்ணாநகர் மண்டல பகுதிகளில் கால்வாய்...