×

தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வுக்கு பள்ளி மாணவர்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடுஅரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. 2023-2024ம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக். 15ம் தேதி நடக்கிறது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2023-2024ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (சி.பி.எஸ்.சி/ ஐ.சி.எஸ்.இ உட்பட) 11ம் வகுப்பு மாணவர்கள், இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் பதிவிறக்கம் செய்து வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம்/ முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.

The post தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வுக்கு பள்ளி மாணவர்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Government Examinations Directorate ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...