×

மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் திரிபவர்களுக்கு அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை: மாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு

தண்டையார்பேட்டை: மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் திரிபவர்களுக்கு தண்டையார்பேட்டை அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் சாலையில் சுற்றித் திரிவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் விதமாக மாநகராட்சி மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதன்படி தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மனோலயா தொண்டு நிறுவனம் மற்றும் மாநகராட்சி சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைத்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மனோலயா தொண்டு நிறுவனத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 485 பேருக்கு கடந்த 2021-22ல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 29 பேர் புதிதாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். 14 பேர் வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். 16 பேர் குணமாகி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேருக்கு இங்கு சிகிச்சை முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு 39 பேர் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 26 பேர் புதிதாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 15 பேர் குணமாகி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ளவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் மருந்து மாத்திரைகள் வழங்கி வருகிறார்கள்.

இந்த காப்பகத்தில் காலை, மதிய உணவு தொண்டு நிறுவனம் மூலம் அளிக்கப்படுகிறது. இரவு உணவு மட்டும் மாநகராட்சி மூலம் வழங்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மற்ற மாநிலங்களை காட்டிலும் சென்னையில் மாநகராட்சி மூலம் சிகிச்சை முடிந்து குணமடைபவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனை சமூக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

The post மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் திரிபவர்களுக்கு அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை: மாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Govt Epidemic Hospital ,Thandaiyarpet ,Thandaiyarpet Government Epidemic Hospital ,Chennai ,Suburbs ,Government Epidemic Hospital ,Dinakaran ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் கைது