புதுடெல்லி: ஐதராபாத்தில் வருகின்ற 16ம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு உறுப்பினர்களை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அறிவித்தார். மூத்த தலைவர்கள் பலர் குழுவிலேயே இடம்பெற்ற நிலையில், இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்த குழுவில் ஜி23 குழு தலைவர்கள் சசிதரூர், ஆனந்த்சர்மா உட்பட மொத்தம் 84 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் வருகின்ற 16ம் தேதி ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் கூறுகையில், ‘‘வரும் 16ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடக்கிறது. 17ம் தேதி காங்கிரஸ் கட்சியின் விரிவான செயற்குழு கூட்டம் நடைபெறும். அதில் அனைத்து பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் பங்கேற்பார்கள். தெலங்கானா தேசிய ஒருங்கிணைப்பு தினமாக கொண்டாடப்படும் 17ம் தேதி மாலை, ஐதராபாத் அருகே மெகா பேரணி நடைபெறும். இதில் தெலங்கானா சட்டமன்ற தேர்தல் குறித்த 5 முக்கிய வாக்குறுதிகளை கட்சி அறிவிக்கும்.
இந்த பேரணிக்கு பின் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் , செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் அணிவகுப்பை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொடியசைத்துதொடங்கி வைக்கிறார். 18ம் தேதி எம்பிக்கள் மட்டுமின்றி அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்கும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும். இதனை தொடர்ந்து பிஆர்எஸ் அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும். முடிவில் தொகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை, அம்பேத்கார் அல்லது கோமராம் பீம் ஆகியோரின் சிலைகள் இருக்கும் பகுதியில் ஊர்வலமாக சென்று நிகழ்ச்சி முடிவடையும்” என்றார்.
* ஒய்எஸ் சர்மிளா 17ம் தேதி காங்கிரசில் இணைகிறார்?
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தங்கை ஒய்எஸ் சர்மிளா தெலங்கானா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை நடத்தி வருகிறார். கடந்த வாரம் அவர் டெல்லியில் சோனியா, ராகுலை சந்தித்தார். இந்தநிலையில் 16ம் தேதி காங்கிரஸ் புதிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் ஒய்எஸ் சர்மிளா கலந்து கொள்வார் என்றும் மறுநாள் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைத்துக்கொள்வார் என்றும் தகவல்கள் பரவி உள்ளன. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் நேற்று கூறும்போது,’ சோனியா,ராகுல்காந்தியை டெல்லியில் ஒய்எஸ் சர்மிளா சந்தித்தார். அந்த சந்திப்பு நல்ல முறையில் நடந்தது. அந்த சந்திப்பில் பேசப்பட்டது பற்றி அவர் தான் விளக்கி கூறவேண்டும். மற்றவற்றை பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார்.
* காங்கிரசில் ஹாக்கி வீரர்
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் பிரபோத் திர்கே நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். புவனேஸ்வரில் ஒடிசா காங்கிரஸ் தலைவர் சரத் பட்டாநாயக் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார்.
The post ஐதராபாத்தில் காங். புதிய செயற்குழு வரும் 16ம் தேதி கூட்டம்: தெலங்கானாவிற்கு 5 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.
