×

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 450 படுக்கை வசதிகளுடன் 6 அடுக்கு புதிய கட்டிடம்: வரும் 17ம் தேதி திறக்க ஏற்பாடு

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 450 படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 மாடி புதிய கட்டிடம், வரும் 17ம் தேதி பயன்பாட்டிற்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் சிறப்பு பிரிவுகள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் மாற்றப்பட்டு வருகிறது. மருத்துவ உலகில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிக்கேற்ப புதிய மருத்துவ உபகரணங்கள் புகுத்தப்படுகின்றன. குறிப்பாக, ரோபோட்டிக் உள்ளிட்ட நவீன வசதிகள் சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. 63 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 6 அடுக்கு கோபுர கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பழைய கட்டிடத்தில் இட நெருக்கடி மற்றும் படுக்கை வசதிகள் போதுமான அளவு இல்லாததால், புதிய கட்டிடத்தில் 450 படுக்கைகளுடன் நவீன மருத்துவ வசதிகளுடன் தரம் உயர்த்தப்படுகிறது.

இந்த 6 அடுக்குமாடி கோபுர கட்டிடம் ₹358.87 கோடி செலவில் 24,973 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டு முகமையின் உதவியுடன் தமிழ்நாடு சுகாதார திட்டம் மூலம் மருத்துவ வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சிறுநீரகம், நரம்பியல், இதயவியல், அறுவை அரங்குகள், அவசர சிகிச்சை வார்டு மற்றும் விஷ மருந்து சிகிச்சை பிரிவுகள், புதிய கோபுர கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மருத்துவ பிரிவுகள் செயல்படுவதற்கு பழைய கட்டிடம் தகுதி இல்லை என்று பொதுப் பணித்துறை அறிவித்ததன் அடிப்படையில் புதிய அடுக்குமாடி மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் கூட்டத்தை சமாளிக்க இடநெருக்கடி ஏற்படுவதால் புதிய கட்டிடம் அவசியமாக உள்ளது.

அதிகரித்து வரும் கூட்டத்தை கையாள்வதில் சிரமம் ஏற்படுவதால் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் சிறப்பு மருத்துவனை போன்று நரம்பியல் துறை, இதய துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ கட்டிடத்தின் மூலம் நோயாளிகளுக்கு கூடுதலான வசதிகளை வழங்க முடியும் என்றும், இந்த புதிய கட்டிடம் வரும் 17ம் தேதி பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது, என மருத்துவமனை டீன் முத்துசெல்வன் தெரிவித்துள்ளார்.

The post கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 450 படுக்கை வசதிகளுடன் 6 அடுக்கு புதிய கட்டிடம்: வரும் 17ம் தேதி திறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Kilpauk ,Government Hospital ,CHENNAI ,Kilpakkam ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...