×

பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திருமலை: ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை வழிமறித்து அதன் முன்பக்க கண்ணாடியை யானை உடைத்தது. இதனை பார்த்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் கொமரடா மண்டலம் ஆர்தம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆந்திரா- தெலங்கானா மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் நேற்று காலை தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென வந்த காட்டு யானை பஸ்சை வழிமறித்தது. பின்னர் தும்பிக்கையால் தாக்கியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இதனை பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். பஸ்சில் இருந்து வெளியே வந்த ஒருவரை பார்த்த யானை மின்னல் வேகத்தில் துரத்தியது. ஆனால் அவர் வேகமாக ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. மறுபுறம், வாகன ஓட்டிகள் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். அப்போது, அவர்களையும் யானை துரத்தியது. இதனால் பொதுமக்கள் நாலா புறமும் சிதறி ஓடி தப்பினர். பின்னர், சிறிது நேரம் கழித்து அந்த யானை அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

The post பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை: பயணிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirumalai ,Andhra Pradesh ,
× RELATED மிக்ஜாம் புயல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது