×

ராயல் என்பீல்டு பைக் ஏற்றிச்சென்றபோது தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரி: தீயில் கருகிய பைக்குகள்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புத்தூர் அருகே ராயல் என்பீல்டு பைக் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் மதிப்புள்ள பைக்குகள் எரிந்து நாசமாகின. ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் ராயல் என்பீல்டு பைக் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு புல்லட் கிளாசிக் 350, ஹண்டர் 350 உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் புல்லட் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட 80க்கும் மேற்பட்ட புல்லட் பைக்குகள் கண்டெய்னர் லாரி மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கபட்டன. வண்டலூர்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. ஒரகடம் அடுத்த காரணிதாங்கல் பகுதியில் கண்டெய்னர் லாரி சென்றபோது திடீரென லாரி தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியுள்ளது. இதையடுத்து டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரகடம் போலீசருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் கண்டெய்னர் லாரியில் இருந்த 20க்கும் மேற்பட்ட புல்லட் பைக்குகள் முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் லாரியில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியில் மின்காசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராயல் என்பீல்டு பைக் ஏற்றிச்சென்றபோது தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரி: தீயில் கருகிய பைக்குகள் appeared first on Dinakaran.

Tags : Royal Enfield ,Sriperumbudur ,
× RELATED பல்வேறு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது