×

மாமல்லபுரம் அருகே புதிய ரேஷன் கடை கட்டும் பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

மாமல்லபுரம்: தினகரன் செய்தி எதிரொலியால் மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சி லிங்கமேடு பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் மணமை, தர்காஸ், மலைமேடு, லிங்கமேடு, கீழக்கழனி, சிவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், மணமை ஊராட்சியில், பெருமாளேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான 2 ரேஷன் கடைகளில், மேற்கண்ட கிராமங்களில் உள்ள 900க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

இதில், குறிப்பாக கீழக்கழனி, சிவராஜபுரம், லிங்கமேடு ஆகிய பகுதிகளில் இருந்து 180க்கும் மேற்பட்ட மக்கள் போதிய வசதி இல்லாத காரணத்தால் 3 கிமீ தொலைவில் உள்ள மலைமேடு பகுதிக்கு நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. மேலும், சில நேரங்களில் ரேஷன் கடை மூடி இருப்பதால் பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து, லிங்கமேடு பகுதியில் நிரந்தரமாக ஒரு ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என தொடர்ந்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, லிங்கமேடு பகுதியில் புதிதாக ரேஷன் கடை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து செய்தி, வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post மாமல்லபுரம் அருகே புதிய ரேஷன் கடை கட்டும் பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Lingamedu ,Maamai Panchayat ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு வரும்...