×

ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளுக்கு நேரடி வர்ணனை செய்து வந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார்: சக விஞ்ஞானிகள் மலரஞ்சலி

சென்னை: இஸ்ரோவின் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளுக்கு நேரடி வர்ணனை செய்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இஸ்ரோ ஒவ்வொரு முறையும் விண்ணுக்கு ராக்கெட்டுகளை ஏவும் போதும் அதன் வெற்றியை எதிர்பார்த்து கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி நேரலைகளை பார்ப்பது வழக்கம். இவற்றை இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்பும். ராக்கெட்டுகள் சரியாக சென்று கொண்டிருக்கிறதா என்பதை நொடிக்கு நொடி விஞ்ஞானிகள் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட் நிகழ்வுகளில் வர்ணனையாளராக இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி பணியாற்றி வந்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி வளர்மதி, கடந்த ஜூலை 30ம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் ஏவப்பட்டதை வர்ணனை செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். ஒவ்வொரு முறையும் ராக்கெட் ஏவப்படும்போது அதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்பதை ராக்கெட் பார்த்து உடனடியாக சொல்ல முடியாது. ராக்கெட் திசை மாறி செல்வதற்கு முன்னரே அதில் பிரச்னை இருப்பது விஞ்ஞானிகளுக்கும், மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கருக்கும் தெரிந்துவிடும். எனவே மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் தான் பிரச்னை இருந்தால் முதலில் அறிவிப்பார்.

எனவே இந்த குரல் எப்போதும் வெற்றி குரலாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் பணி என்பது முக்கியமானதாகும். இவர் கடைசியாக சந்திரயான் -3 கவுன்ட் டவுனுக்கும் குரல் கொடுத்துள்ளார். அவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் வேங்கட கிருஷ்ணன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் எதிர்கால பயணங்களின் கவுன்ட் டவுன்களுக்கு வளர்மதி மேடத்தின் குரல் இருக்காது. சந்திரயான்-3 அவரது இறுதி கவுன்டடவுன் அறிவிப்பு. எதிர்பாராத மரணம். மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

* தமிழ்வழியில் பயின்றவர்
தமிழ்நாட்டின் அரியலூரில் பிறந்து தமிழ்வழியில் பள்ளிப் படிப்பைப் பயின்ற வளர்மதி, பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்தார். அதன் பின்னர், 1984ல் இஸ்ரோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 2011ம் ஆண்டில் ஜிசாட்- 12 பணியின் திட்ட இயக்குநர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2015ல் அப்துல் கலாம் நினைவாக தமிழக அரசின் விருதை வளர்மதி பெற்றார்.

* முதல்வர் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த Mission Range Speaker வளர்மதி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். மிகவும் சவாலான ஒரு பணியை திறம்பட கையாண்டு, இஸ்ரோவின் முக்கிய திட்டப் பணிகளுடைய வெற்றி தருணங்களின் குரலாக ஒலித்த வளர்மதி மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது பணியிட தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

The post ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளுக்கு நேரடி வர்ணனை செய்து வந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார்: சக விஞ்ஞானிகள் மலரஞ்சலி appeared first on Dinakaran.

Tags : ISRO ,Vakarmati ,Malaranjali ,Chennai ,Tamil Nadu ,Varamathi ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...