×

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை என்எல்சி மிரட்டுவதா? அதிகாரி மீதான நடவடிக்கைக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை

சென்னை:என்எல்சி அனல் மின் நிலைய விபத்து தொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, என்.எல்.சி. அதிகாரிகளான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆர்எம்டி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, என்எல்சி அதிகாரிகளுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

அதற்கு பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்.எல்.சி. மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி பிறப்பித்த சுற்றறிக்கை உளவியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துவதால், மனுவாக தாக்கல் செய்ய இயலவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, தீ விபத்து குறித்த விசாரணை குறித்த அறிக்கையை செப்டம்பர் 25ம் தேதி போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி ஆகஸ்ட் 17ம் தேதி நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், அன்று மாலையே என்எல்சி மனித வளம் மேம்பாட்டு துறையின் உதவி பொது மேலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் நிறுவனத்திற்குள் நடைபெறும் விவகாரங்களை வழக்கறிஞர்களிடம் பகிர்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உகந்த வழக்காகும். எனவே, இந்த விவகாரத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன். இந்த சுற்றறிக்கை பிறப்பித்த மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியின் பெயர் உள்ளிட்ட தகவலை 3 நாளில் என்எல்சி நிறுவனம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

The post தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை என்எல்சி மிரட்டுவதா? அதிகாரி மீதான நடவடிக்கைக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : NLC ,Madras High Court ,Chennai ,power ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான...