×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் நம்பர் 1 இகாவை வீழ்த்தினார் ஆஸ்டபென்கோ: காலிறுதியில் போபண்ணா ஜோடி

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியாடெக்கை வீழத்திய யெலனா ஆஸ்டபென்கோ முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். போலந்து நட்சத்திரம் ஸ்வியாடெக்குடன் (22 வயது, 1வது ரேங்க்) ஏற்கனவே 3 முறை மோதியுள்ள ஆஸ்டபென்கோ (லாத்வியா, 26 வயது, 21வது ரேங்க்), 3-0 என ஆதிக்கம் செலுத்தி வந்தார். இகா நம்பர் 1 ஆன பிறகு, நேற்றுதான் முதல் முறையாக களத்தில் சந்தித்தனர். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்போட்டியில் ஆஸ்டபென்கோ 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடி 3-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 48 நிமிடத்துக்கு நீடித்தது. இகா மீதான ஆதிக்கத்தை ஆஸ்டபென்கோ மீண்டும் நிலை நாட்டியுள்ள நிலையில், 75 வாரங்களாக மகளிர் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இகா பின்னுக்குத் தள்ளப்பட்டு சபலெங்கா நம்பர் 1 வீராங்கனையாக உள்ளார். மற்றொரு 4வது சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியுடன் மோதிய அமெரிக்க நட்சத்திரம் கோகோ காஃப் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். செக் குடியரசின் கரோலினா முச்சோவா, சொரானா சிர்ஸ்டியா (ருமேனியா) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), அமெரிக்க வீரர்கள் பிரான்சிஸ் டியபோ, பென் ஷெல்டன், டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜூலியன் கேஷ் – ஹென்றி பேட்டன் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 20 நிமிடத்துக்கு நீடித்தது.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் நம்பர் 1 இகாவை வீழ்த்தினார் ஆஸ்டபென்கோ: காலிறுதியில் போபண்ணா ஜோடி appeared first on Dinakaran.

Tags : US Open ,Astapenko ,Iga ,Bopanna ,New York ,US Open Grand Slam ,Astabenko ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா முன்னேற்றம்