செங்கல்பட்டு: சிறுதாவூர் கிராமத்தில் தலித் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு விவசாயம் செய்திட 53 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இது ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ, சார்பில் கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதிஅண்ணா மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் சிறுதாவூர் கிராமத்தில் தலித் மக்கள் 20 குடும்பங்களுக்கு விவசாயம் செய்ய தலா ஒரு நபருக்கு 2.5 ஏக்கர் வீதமும் வீட்டுமனையாக தலா 10 சென்ட் இடமும் 1967ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் மொத்தம் 53 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலங்களை மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியதன் விளைவாக, கலைஞர் உத்தரவின்பேரில், கடந்த 2006ம் ஆண்டு நீதியரசர் சிவசுப்பிரமணியம் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணை ஆணையம் 202.2010ல் தனது விசாரணையில் முடிவாக மேற்படி கிராமத்தில் உள்ள 53 ஏக்கர் நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் 34 ஏக்கர் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு கைப்பற்றி அதனை நிலமற்ற ஏழை தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்துள்ளது. மேலும் சட்டமன்றத்தில் அன்றைய தலைமை செயலாளர் திரிபாதி கீழ்கண்டவாறு ஆணையர் நிலம் மற்றும் மாவட்ட கலெக்டர் குறிப்பிட்டுள்ள நிலங்களை நிலமற்ற, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த நிலங்களை தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்து ரியல் எஸ்டேட் செய்யும் நோக்கத்துடன் நிலங்களை கைப்பற்றப்பட்டு வருகிறது. இப்பிரச்னையில் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றியும் 53 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து முள்வேலி அமைத்து அறிவிப்பு பலகை வைத்து பாதுகாத்திட வேண்டும்.
The post சிறுதாவூரில் தலித் மக்களுக்கு வழங்கிய நிலத்தை பாதுகாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ, கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.