×

சனாதனம் குறித்து பேச உரிமை இருக்கிறது அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பாஜக அலறித் துடிப்பது ஏன்? கே.எஸ். அழகிரி கேள்வி

நெல்லை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்துக்கு பாஜக அலறிதுடித்து வருவதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். நெல்லை மாநகர் மாவட்ட காங்., அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அளித்த பேட்டி; சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பாஜ அலறித் துடிக்கிறது. ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் சனாதனம் குறித்து தெரிவித்த கருத்துகளை தான் உதயநிதியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேச அவருக்கு உரிமை உள்ளது. இது ஒன்றும் தவறானது அல்ல.

சனாதனத்துக்கு எதிரான கருத்து இந்து மதத்திற்கு எதிரானதல்ல. ஆனால் பாஜக இதனை திரித்துக் கூறி பொதுமக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறது. ராமானுஜர், வள்ளலார் ஆகியோர் மூட பழக்க வழக்கம், தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவர்கள். இவர்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான். சனாதன தர்மத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள். இதையே தான் உதயநிதியும் தெரிவித்துள்ளார். இதனை கண்டு பாஜக அச்சப்படவும், அலறித் துடிக்கவும் தேவையில்லை. வடலூர் வள்ளலார் சுவாமிகள் தனது நூலில் மதம் எனும் பேய் என்னை பிடியாதிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மதத்தால் பிற்போக்கு தனம் கூடாது. பகுத்தறிவு வளர வேண்டும் என்று கூறுவது தவறானது அல்ல. சுவாமி விவேகானந்தரும் மூடபழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். தேர்தல் வந்துவிட்டதால் ஜாதி, மதம், இனம், மொழிகள் மூலம் மக்களிடம் பிளவு ஏற்படுத்தி வாக்கு வங்கி மூலம் வெற்றி பெற பாஜ முயற்சித்து வருகிறது. சனாதனத்தை மறுப்பது கடவுளை மறுப்பது அல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சர்வாதிகார மனப்பான்மையாகும். நாடுதழுவிய சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றால் மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்தியா ஜனநாயக நாடு, இங்கு ஒற்றை ஆட்சி முறை இல்லை. பாஜகவின் இத்திட்டம் தோல்வியில் முடியும். அதிபர் முறையை கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. ஹிட்லரும், முசோலினியும் இதைத்தான் செய்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சனாதனம் குறித்து பேச உரிமை இருக்கிறது அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பாஜக அலறித் துடிப்பது ஏன்? கே.எஸ். அழகிரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : BJP ,Minister ,Udayanidhi ,Sanathanam ,K.S. ,Nellai ,Congress ,president ,K.S.Azhagiri ,Udhayanidhi ,K.S. Alagiri ,
× RELATED அமைச்சர் உதயநிதி மீது அவதூறு: பாஜக பிரமுகர் அதிரடி கைது