
திருத்தணி: புதுமனை புகுவிழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும்போது, இரு சக்கர வாகனத்திலிருந்து தடுமாறி விழுந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டதில், மாஜி எம்பி ஆறுதல் கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). இவரது மனைவி ராணி(38). இவர்களின் குழந்தைகள், தேஜஸ்வரி(13) ஸ்ரீலேகா(11) திருச்செல்வன்(8) ஆகிய 5 பேரும் நேற்று மாலை ஒரே இரு சக்கர வாகனத்தில் திருத்தணியில் உள்ள சரஸ்வதி நகரில் நடந்த புதுமனை புகுவிழாவிற்கு சென்றனர். பின்னர், வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, காட்ரோடு அருகே திடீரென இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், மேற்கண்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த அரக்கோணம் அதிமுக மாஜி எம்.பி கோ.அரி விபத்தில் காயம் ஏற்பட்டு கிடந்த அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஆட்டோ மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்தால் அரக்கோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post இரு சக்கர வாகனத்திலிருந்து தடுமாறி விழுந்து விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காயம்: மாஜி எம்பி ஆறுதல் appeared first on Dinakaran.