×

கோயிலில் சிவலிங்கம் மீது கைகழுவிய பாஜ அமைச்சர்: இதுதானா உங்க சனாதன தர்மம்?

பாராபங்கி: உத்தரப்பிரதேசத்தில் பாஜ அமைச்சர் ஒருவர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது கைகழுவிய வீடியோ வைரலாகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் ஹெத்மாபூர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் 27ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்க சென்ற அம்மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் சதீஷ் சர்மா, அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற லோதேஷ்வர் மகாதேவ் சிவன் கோயிலுக்கு சென்றார்.

அங்கு பூஜையின் போது, அமைச்சர் சதீஷ் சர்மா, சிவலிங்கத்தின் அடிப்பகுதியில் தனது கைகளை கழுவி உள்ளார். அமைச்சரின் கையில் பிரசாதம் ஒட்டிக் கொண்டிருந்ததால், அதை சுத்தம் செய்ய கோயில் பூசாரி தண்ணீர் ஊற்ற, சிவலிங்கத்தின் மீது படும்படி அமைச்சர் தனது கைகளை கழுவும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன. அமைச்சர் சதீஷ் சர்மாவின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரசை சேர்ந்த சுரேந்திர ராஜ்புத் கூறுகையில், ‘‘தனது கையை கழுவி சிவபெருமானை அமைச்சர் சதீஷ் சர்மா அவமதித்துள்ளார். இது அநீதி. சனாதன தர்மத்தை அவமதித்து விட்டார். மத விரோத செயலுக்காக அமைச்சரை முதல்வர் யோகி பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்றார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் சுனில் சிங் கூறுகையில், ‘‘இதுவே வேறு சமூகத்தை சேர்ந்த பாஜ தலைவர் செய்திருந்தால் இந்நேரம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார். இதுதான் பாஜவின் உண்மையான முகம். இவர்கள் மதத்தால் ஓட்டு கேட்பார்கள். பின்னர் இது போல அவமரியாதை செய்வார்கள்’’ என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் சதீஷ் சர்மா, ‘‘நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் ஒரு சனாதனி சிவ பக்தன். எது சரி, எது தவறு என்பதை அறவேன். எனது கையில் சந்தனமும், தேனும் இருந்ததால், சிவபெருமான் காலடியில் கையை சுத்தம் செய்தேன்’’ என விளக்கமளித்துள்ளார்.

The post கோயிலில் சிவலிங்கம் மீது கைகழுவிய பாஜ அமைச்சர்: இதுதானா உங்க சனாதன தர்மம்? appeared first on Dinakaran.

Tags : BJP ,Barabanki ,Uttar Pradesh ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...