×

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

இதில், நிலம் சம்பந்தமாக 88 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 57 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 34 மனுக்களும், பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 52 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 71 மனுக்களும் என மொத்தம் 302 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கடந்த 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் கொடிநாள் வசூல் செய்து, வழங்கிய 15 அலுவலர்களுக்கு, முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பாக வெள்ளிப் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். பின்னர், தையல் இயந்திரம் வேண்டி மனு வழங்கிய 9 நபர்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில், ஊரக வளர்ச்சி துறை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தலா ரூ.8,500 வீதம் 9 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.76,500 மதிப்பீட்டிலான தானியங்கி தையல் இயந்திரங்களை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் ராஜலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மதுசூதனன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மாலதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், ஊரக வளர்ச்சித்துறை உதவி திட்ட அலுவலர் சீதாலட்சுமி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Day ,Tiruvallur ,Alby John Varghese ,Dinakaran ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்