×

இளம் வயதினர் மத்தியில் கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு?: ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்பு அபாயத்திற்குமான தொடர்பு குறித்த ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக இளம் வயதில் மாரடைப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆரோக்கிய இளம் வயது நபர்கள் உடற்பயிற்சியின் போதும், இளம் வயது விளையாட்டு வீரர்கள் ஆடுகளத்திலும் மாரடைப்பால் இறந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசிகள் என்ற ஆதாரமற்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், மாரடைப்பால் ஏற்படும் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்குமான தொடர்பு குறித்த ஆய்வு முடிவு பிஎல்ஓஎஸ் ஒன் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 2021 ஆகஸ்ட் முதல் 2022 ஆகஸ்ட் மாதம் வரை டெல்லியில் உள்ள ஜி பி பண்ட் மருத்துவமனையில் 1,578 பேரின் தரவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1,086 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், 492 பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள்.

இந்த ஆய்வில் தலைமை வகித்த ஜிபி பண்ட் மருத்துவமனை டாக்டர் மோகித் குப்தா கூறியதாவது:
இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று எங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில், தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு மாரடைப்பு மரணங்களுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எங்கள் ஆய்வில் எந்த பக்கவிளைவுகளையும் காணவில்லை. தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு ஆபத்து கணிசமாக குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post இளம் வயதினர் மத்தியில் கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு?: ஆய்வில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,Dinakaran ,
× RELATED எல்லா நோய்களுக்கும் சிகிச்சை...