
கொல்கத்தா: மேற்கு வங்க பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால துணை வேந்தர்களை கவர்னர் நியமனம் செய்ததற்கு மம்தா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக மாநில அரசு, ஆளுநர் இடையே மோதல் போக்கு நீடித்தது. இது குறித்து ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் மோதல் போக்கை கடைபிடித்தால், ஆளுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் ப்ரத்யா பாசு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரெசிடன்சி, எம்ஏகேஏயூடீ மற்றும் பர்த்வான் உள்ளிட்ட 7 பல்கலைக் கழகங்களுக்கு இடைக்கால துணை வேந்தர்களை நியமித்து ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டார்.இதனால் ஆத்திரமடைந்த கல்வி அமைச்சர் பாசு, “ஆளுநரின் சமீபத்திய நடவடிக்கை உயர் கல்வி அமைப்பை அழிப்பதாக உள்ளது. எந்த அமைப்பிடமும் கலந்து ஆலோசிக்காமல் அவர் துணை வேந்தர்களை நியமித்துள்ளார்.
இது அவர் சர்வாதிகார முறையில் நடந்து கொள்வதை காட்டுகிறது. அவரது இந்த நடவடிக்கைகளை பார்த்து கொண்டு அரசு அமைதியாக இருக்காது,” என்று தெரிவித்தார். மேலும் 9 பல்கலைக் கழகங்களுக்கு இடைக்கால துணை வேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post மே.வங்க பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால துணைவேந்தர்களை நியமனம் செய்தார் ஆளுநர்: மம்தா அரசு கடும் கண்டனம் appeared first on Dinakaran.