×

பெரியபாளையத்தில் 1961-ல் கட்டப்பட்டு புதர் மண்டி காணப்படும் பழைய பிடிஒ அலுவலகம்; விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் பழுதடைந்து புதர்கள் மண்டிக்கிடக்கும் பழைய பிடிஒ அலுவலக கட்டிடத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில் கடந்த 1961ம் ஆண்டு சமுதாய நலத்திட்டத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம் என்ற பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு, அதே வருடம் ஊத்துக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடம் என அப்போதைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் திறந்து வைத்தார். இந்த அலுவலகம் 43 வருடங்களுக்கு பிறகு பழுதடைந்த காரணத்தால் 2004ம் ஆண்டு இதன் அருகிலேயே புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.

தற்போது இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 53 ஊராட்சிகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை, சாலை வசதி, தெருவிளக்கு, பசுமை வீடுகள், சத்துணவு கூடம், அங்கன்வாடி என பல்வேறு பிரச்னைகள் குறித்த கோரிக்கைகளை கூற, ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்களும் ஊராட்சி செயலாளர்களும் இங்குதான் வர வேண்டும். இந்த அலுவலகத்தில் பிடிஒக்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊழியர்கள் என 80க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள்.

இந்நிலையில் தற்போது உள்ள பிடிஒ அலுவலகத்தின் இடது புறத்தில் உள்ள பழைய பிடிஒ அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து செடி கொடிகள் படர்ந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தற்போதுள்ள வட்டார கல்வி அலுவலகத்திற்குள் நுழைகிறது. இதனால் அலுவலக ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகிறார்கள். எனவே, புதர் மண்டி கிடக்கும் பழைய பிடிஒ அலுவலக கட்டிடத்தை அகற்ற வேண்டும் என ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையத்தில் 1961-ல் கட்டப்பட்டு புதர் மண்டி காணப்படும் பழைய பிடிஒ அலுவலகம்; விஷ ஜந்துக்கள் நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Pto ,Periyapalayam ,Poothukkotta ,Pdo ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம் அரசு பள்ளி வளாகத்தில்...