×

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் ரூ.521 கோடியில் கட்டப்படும் 10 பாலங்கள்: பணிகள் தீவிரம்

சிறப்பு செய்தி: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை சாலைகளில் கார், பைக், ஆட்டோ, டாக்சி மற்றும் மாநகர பஸ்களின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் மருத்துவம், துணி கொள்முதல், மருந்து கொள்முதல், காய்கறி லாரிகள், அரசு பணி நிமித்தமாக வரும் கார்கள், சுற்றுலா பஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இதனால் வாகனகள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதனை கருத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லா சென்னையை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னையில் புதிதாக 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் சில மேம்பாலங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அவ்வாறு கட்டப்படும் பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சென்னை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாறும் என்கிறார்கள் அதிகாரிகள். சென்னையில் தற்போது 10 இடங்களில் பாலங்கள் வேகவேகமாக கட்டப்பட்டு வருகிறது.

யானைகவுனி பாலம்: சென்னை யானைகவுனி பாலம் பேசின்பிரிட்ஜ் சந்திப்பை இணைக்கிறது. இதனால், புரசைவாக்கம், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து எளிமையாகும். எனவே, சென்னை மாநகராட்சி-ரயில்வே இணைந்து யானை கவுனி பகுதியில் ரூ.30.78 கோடியில் பாலம் அமைத்து வருகிறது. இதற்காக மேம்பால செலவுக்கான நிதியை 50:50 என்று தெற்கு ரயில்வே- சென்னை மாநகராட்சி பகிர்ந்து கட்டி வருகின்றனர். இதில் சென்னை மாநகராட்சி பாலத்தின் ஒரு பகுதியை கட்டி முடித்துள்ளது. ரயில்வே துறை மேற்கொண்டு வரும் பணிகள் டிசம்பர் மாதங்களில் முடிவடைகிறது. இந்த பணிகள் முழுமையாக முடிந்தவுடன் அடுத்தாண்டு தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

போஜராஜ நகர் பாலம்: சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்தில் 53வது வார்டில் கொருக்குப்பேட்டை மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை ரயில்வே நிலையம் அருகே கொருக்குப்பேட்டை மற்றும் போஜராஜா நகர் பிரதான சாலையை இணைக்கும் சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு ரூ.13.40 கோடி. இதிலும் சென்னை மாநகராட்சி-ரயில்வே நிர்வாகம் இணைந்து அமைத்து வருகிறது. ரயில்வே பகுதியில் சாலை பணிகள் முடிந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியின் பகுதியில் தற்போது 20மீ அளவில் பணிகள் மட்டுமே மீதமுள்ளது. அதை முடிக்கும் வேலையில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தி.நகர் பாலம்: சென்னை மாநகராட்சி தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி 1வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலம் 747 மீ. நீளம் கொண்டது. இந்த மேம்பாலத்தின் சாய்தளத்தை தகர்த்து புதிதாக அமைக்கப்படவுள்ள மேம்பாலத்துடன் இணைக்கப்படுகிறது. இது இரும்பு பாலமாக அமையும். இந்த பகுதியில் பால பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கணேசபுரம் பாலம்: வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் நீர் தேங்குவதால் ஆண்டாண்டு காலமாக வாகன போக்குவரத்து தடைபடும் நிலை உள்ளது. எனவே, மழைகாலங்களில் பொதுமக்கள் மாற்றுபாதையை தான் பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த நிலைக்கு முடிவு கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதனால் ரூ.142 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் 15.2 மீட்டர் அகலத்திலும் 600 மீட்டர் நீளத்திலும் கட்டப்படுகிறது. இந்த பணி பிப்ரவரி மாதம் 20ம் தேதி முடிவுக்கு வந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.

மணலி பாலம்: மணலி பாலத்தின் கீழ் 79 இடங்களில் கடக்கால் தாங்கும் தூண் அமைக்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் 32 இடங்களில் தூண் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் பிப்ரவரிக்கும் முடியும் வகையில் முடியும். இதன் மதிப்பு 96.4 கோடியாகும்.

வடபெரும்பாக்கம் பாலம்: வடபெரும்பாக்கம் பகுதியில் பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது. அங்கு விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. நிலமீட்பு பணிக்காக அரசின் அனுமதி பெறவேண்டியுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் பால பணிகள் முடியும். இதற்கான உத்தரவு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.22.41 கோடியாகும்.

கீழ்ப்பாக்கம் கார்டன் பாலம்: அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 98வது வார்டு, கீழ்ப்பாக்கம் அடுத்த ஆஸ்பிரியன் கார்டன் பகுதியில், ஓட்டேரி கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே, ஆஸ்பிரியன் கார்டன் 2வது தெரு மற்றும் கீழ்ப்பாக்கம் கார்டன் தெருவை இணைக்கும் பகுதியில், பழமையான கீழ்மட்ட பாலம் இருந்தது. இந்த பாலத்தில் போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது. எனவே, இங்கு, சென்னை மாநகராட்சி சார்பில், 6.20 கோடி ரூபாய் மதிப்பில், இருபுறமும் நடைபாதையுடன் கூடிய புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு பக்கமும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திட்டமிட்ட காலத்திற்கு முன் முடிக்கப்படவுள்ளது. டிசம்பர் மாதங்களில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதம்பாக்கம் பாலம்: ஆதம்பாக்கம் பாலம் பணியானது 22.4 மீ. நீளத்திலும், இருபுறமும் 1.5 மீ அகலத்தில் நடைபாதையுடன் 11.5 மீ. அகலத்திலும் அமைக்கப்படுகிறது. இத்திட்டப்பணியானது உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. ஜீவன் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மேடவாக்கம் பிரதான சாலையை அடைவதற்கு சுமார் இரண்டு கி.மீ. தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இப்பாலம் முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும் போது இப்பகுதி மக்கள் மேடவாக்கம் பிரதான சாலையை சென்றடையலாம். இங்கு அமைக்கப்பட்டு வரும் பாலமானது ஒரு பக்கம் முடிந்துள்ளது. பொதுப்பணி துறையின் உத்தரவு கிடைத்தவுடன் மறுபக்கமும் பணிகள் தொடங்கப்பட்டு 5 அல்லது 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சின்ன நொளம்பூர் பாலம்: சின்ன நொளம்பூரில் பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. 35 இடங்களில் அடித்தளம் போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் 8 மாதங்களில் முடிக்கப்படவுள்ளது. இதன் மதிப்பு 42.71 கோடி.

சன்னதி தெரு பூந்தமல்லி பாலம்: ரூ. 31.65 கோடியில் பாலம் கட்டப்படுகிறது. இங்கு நிலமீட்பு பணிகள் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும். இது தவிர்த்து, வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் எடுப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின்பு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். சென்னையில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் பெரும்பாலும் முடியும் தருவாயில் உள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் ரூ.521 கோடியில் கட்டப்படும் 10 பாலங்கள்: பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai… ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...