![]()
ஜி 20 மாநாட்டுக்காக குஜராத்தை போல டெல்லியிலும் குடிசை பகுதிகளை திரைசீலைகள் மற்றும் விளம்பர பதாகைகளை கொண்டு ஒன்றிய அரசு மறைத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சர்வதேச தலைவர்கள் தங்கும் ஓட்டல்கள் வரை குடிசை பகுதிகளை மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வசந்த் விகாரில் உள்ள குடிசை பகுதி பச்சை நிற ராட்சத திரைசீலைகளை கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. அதன் நடுவே பிரதமர் மோடியின் உருவப்படம் பொரித்த ஜீ 0 பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக டிஎன்டி பாலத்திற்கு அருகே உள்ள செக்டர் 16 சாலையோரத்தில் குடிசை பகுதிகளை அரசு அதிகாரிகள் வெள்ளைநிற திரைசீலைகளை கொண்டு மறைத்திருந்தனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். சர்வதேச தலைவர்கள் இந்தியா வரும் போது அவர்களது கண்களுக்கு குடிசை தெரியாமல் இருப்பதற்காக திரைசீலையை கொண்டு மறைப்பது இது முதல்முறை அல்ல.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் குஜராத் வந்த போதும் இதேபோல குடிசைகள் மறைக்கப்பட்டிருந்தன. அதேபாணியில் தற்போது டெல்லியிலும் குடிசைகள் மறைக்கப்படுகின்றன. இந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பலரும் ஒன்றிய அரசை விமர்சித்து வருகின்றனர்.

The post ஜி20 மாநாட்டுக்காக டெல்லி முழுவதும் திரைச் சீலைகள், விளம்பர பதாகைகள் மூலம் குடிசைகள் மறைப்பு: இணையத்தில் வீடியோ வெளியிட்டு ஒன்றிய அரசு மீது விமர்சனம் appeared first on Dinakaran.
