×

இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதலை வர்ணனை செய்து வந்த வளர்மதி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதலை வர்ணனை செய்து வந்த வளர்மதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வலுவான இடத்தை பிடித்துள்ளது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தனது ஆராய்ச்சிகளை இஸ்ரோ விரிவுபடுத்தி வருகிறது. இஸ்ரோ ஒவ்வொரு முறையும் விண்ணுக்கு ராக்கெட்டுகளை ஏவும் போதும் அதன் வெற்றியை எதிர்பார்த்து கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி நேரலைகளை பார்ப்பது வழக்கம். இவற்றை இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்பும். ராக்கெட்டுகள் சரியாக சென்று கொண்டிருக்கிறதா என்பதை நொடிக்கு நொடி விஞ்ஞானிகள் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட் நிகழ்வுகளில் வர்ணனையாளராக இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி பணியாற்றி வந்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி வளர்மதி, கடந்த ஜூலை 30ம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் ஏவப்பட்டதை வர்ணனை செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று திடீரென உயிரிழந்தார். ஒவ்வொரு முறையும் ராக்கெட் ஏவப்படும்போது அதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்பதை ராக்கெட் பார்த்து உடனடியாக சொல்ல முடியாது. ராக்கெட் திசை மாறி செல்வதற்கு முன்னரே அதில் பிரச்னை இருப்பது விஞ்ஞானிகளுக்கும், மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கருக்கும் தெரிந்துவிடும். எனவே மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் தான் பிரச்னை இருந்தால் முதலில் அறிவிப்பார். எனவே இந்த குரல் எப்போதும் வெற்றி குரலாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

அந்த வகையில் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் பணி என்பது முக்கியமானதாகும். கம்பீரமான குரல், தொழில்நுட்ப வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் என தனது தனித்துவமான குரலால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பலராலும் பாராட்டப்பட்டவர் வளர்மதி. எனவே வளர்மதியின் இழப்பு விஞ்ஞானிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு விண்ணில் ரிசாட்-1 எனும் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.  இந்த திட்டத்தின் திட்ட இயக்குநராக வளர்மதி பணியாற்றியுள்ளார். கடைசியாக சந்திரயான் 3 கவுண்டவுனுக்கும் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்; இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த ‘Mission Range Speaker’ வளர்மதி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். மிகவும் சவாலான ஒரு பணியைத் திறம்படக் கையாண்டு, இஸ்ரோவின் முக்கியத் திட்டப்பணிகளுடைய வெற்றித் தருணங்களின் குரலாக ஒலித்த திருமதி. வளர்மதி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது பணியிடத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதலை வர்ணனை செய்து வந்த வளர்மதி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Isrou ,Chief Minister ,Mu.D. G.K. ,Stalin ,Chennai ,Mukhya Mukhya ,ISRO ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...