×

செயற்கை சுவாசத்தால் உயிர்வாழும் குழந்தை: அரசு உதவி செய்ய பெற்றோர் கோரிக்கை

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட ஒரு வயது குழந்தைக்கு 24 மணி நேரமும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கலைவாணி (32). இவர்களுக்கு தியா(4), ஹர்ஷினி(1) என்ற 2பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தை ஹர்ஷினி பிறந்த 3 மாதத்தில் காய்ச்சல் சளி, இருமல் உள்ளிட்ட நோய் தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் 5 மாதத்திற்கும் மேலாக ஹர்ஷினிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர பரிசோதனையில் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, ‘குழந்தை ஹர்ஷினியை தொடர் சிகிச்சையில் வைக்க வேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து’ என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக 1 மாதத்திற்கு மட்டும் 1 லட்சம் ரூபாய் சிகிச்சை செலவு செய்து காப்பாற்றி வருகின்றனர். இதனால் ராமமூர்த்தி, சொந்த ஊரில் இருந்தால் தனது குழந்தையை காப்பாற்ற முடியாது எனக்கூறி வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். அங்கு வேலை செய்து கொண்டு தற்போது வரை குழந்தையின் சிகிச்சைக்காக பணம் அனுப்பி வருகிறார். குழந்தையின் சிகிச்சைக்கு தற்போது வரை சுமார் ₹20 லட்சம் வரை செலவு செய்துள்ளார்களாம்.

மேலும் வீட்டிலேயே குழந்தைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் அனைத்து விதமான கருவிகளையும் வாங்கி வைத்து செயற்கை சுவாசம் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து மாதத்திற்கு 4 முறை வேலூரில் தனியார் மருத்துவமனைக்கும் சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து குழந்தையின் தாய் கண்ணீருடன் கூறியதாவது: எனது குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசம் அளித்து வருகிறோம். குழந்தைக்கு தற்போது மாற்று சிகிச்சை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. 5 வயது வரை குழந்தைக்கு செயற்கை சுவாசம்தான் வழங்கவேண்டும்.

அதன்பின்னர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது குறித்து முயற்சி மேற்கொள்ளப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இவ்வாறு சிகிச்சை அளிக்க பல லட்சம் செலவாகும் என தெரிகிறது. ஆனால் எங்களால் அவ்வளவு பணம் செலவு செய்ய நிலையில் உள்ளோம். எனவே தமிழக அரசு எனது குழந்தை உயிர் பிழைக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றார்.

The post செயற்கை சுவாசத்தால் உயிர்வாழும் குழந்தை: அரசு உதவி செய்ய பெற்றோர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Natrampalli ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...