×

கிராமங்கள், நகரங்களில் தமிழ்நாடு யாதவர் மகாசபையை பலப்படுத்த வேண்டும்: திருச்சியில் யாதவர் மகாசபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாடு யாதவர் மகாசபை சார்பில், திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில், சிறுகனூர் அருகே எழுச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு தமிழ்நாடு யாதவர் மகாசபை தலைவர் டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று, யாதவர் மகாசபையின் எழுச்சி மாநாட்டை துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உத்தரப் பிரதேச எம்பி ஷியாம்சிங் யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உத்தரகாண்ட் மாநில பொறுப்பாளர் தேவேந்தர் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் தமிழ்நாடு யாதவர் மகாசபை தலைவர் டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன் பேசுகையில், பல்லாண்டுகளாக யாதவர் இனத்துக்கு மிகப்பெரிய வரலாறு, பாரம்பரியம் உள்ளது. எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ, அதை சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பார்கள்.

நீங்கள் அவ்வாறு நல்ல சந்தர்ப்பமாக மாற்றி இருக்கிறீர்கள். யாதவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும். ஏதேனும் ஒரு கட்சி யாதவர்களை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்தால், அவர்களை தமிழ்நாடு யாதவர் மகாசபையும் ஒட்டுமொத்த யாதவர்களும் ஒதுக்கித் தள்ளவேண்டும். மேலும், கிராமங்கள் மற்றும் நகரங்களில் தமிழ்நாடு யாதவர் மகாசபையை பலப்படுத்த வேண்டும். நாங்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் இல்லை. நிலவுக்கு சந்திரயான் அனுப்பிய பெண்களில் ஒருவர், எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர். நாங்கள் ஆடு மேய்ப்பவர்களாகவும் இருப்போம், சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் விஞ்ஞானியாகவும் இருப்போம் என்று நாசே ராமச்சந்திரன் தெரிவித்தார். இம்மாநாட்டில், யாதவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அதுவரை யாதவர்களுக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்போர் நல வாரியத்தை அமைத்து, அதற்கு யாதவர்களை நியமிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் யாதவர்களின் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும், ஆளுங்கட்சி அமைச்சரவையில் யாதவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிட வேண்டும். அப்படி வாய்ப்பு அளிக்காவிட்டால், தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் யாதவர் மகாசபை சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்பது உள்பட 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், யாதவ மகாசபை நிர்வாகிகள் பொட்டல் துரை, ஏ.எம்.செல்வராஜ், எம்.ஆர்.பன்னீர்செல்வம், எம்கேஆர்.மெய்யப்பன், வழக்கறிஞர் கே. சபாபதி, மாநில பொது செயலாளர் வேலு மனோகரன், மாநில பொருளாளர் எத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கிராமங்கள், நகரங்களில் தமிழ்நாடு யாதவர் மகாசபையை பலப்படுத்த வேண்டும்: திருச்சியில் யாதவர் மகாசபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Yadav ,Mahasabha ,Trichy Yadav Mahasabha conference ,CHENNAI ,Tamil Nadu Yadav ,Sirukanur ,Trichy-Chennai ,Yadava Mahasabha conference ,Trichy ,Dinakaran ,
× RELATED அகிலேஷ் யாதவ் கன்னாஜ் தொகுதியில் போட்டி