×

சென்னை ரயிலின் ஏசி பெட்டியில் மழைநீர் கொட்டியதால் பரபரப்பு: பயணிகள் வாக்குவாதம்

நாகர்கோவில்: சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், குழித்துறை வழியாக திருவனந்தபுரத்துக்கு அனந்தபுரி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று இரவு சென்னையில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டது. ரயிலில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பயணம் செய்தனர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் செங்கல்பட்டு பகுதியில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இரவு என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது ஏசி முதல்வகுப்பு ‘ஏ2’ பெட்டியில் திடீரென மேலிருந்து மழைநீர் கொட்டியது. இதனால் விழித்து எழுந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் மழைநீரை வழித்து விட்டபடி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். ஆனால் சிறிதுநேரத்தில் அதிகளவு தண்ணீர் கொட்டியது. மொத்தம் 6 இடங்களில் இதுபோல மழைநீர் கொட்டி பயணிகளை எரிச்சலடைய வைத்தது. தூக்கம் தொலைந்த நிலையில், மழைநீரால் பயணிகள் மிகுந்த சிரமம் மற்றும் அசவுகரியத்துக்கு உள்ளாயினர். இதையடுத்து அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று முறையிட்டதோடு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘பயண வசதிகள் கருதி, கட்டணத்தை பார்க்காமல் ரயில்களில் ஏசி பெட்டிகளை தேர்வு செய்கிறோம். ஆனால் அதிக கட்டணங்கள் வசூலித்துவிட்டு, அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் விட்டு விடுகின்றனர். ரயில் பெட்டிகளில் இதுபோன்று மழைநீர் ஒழுகுவதால், பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே ரயில்வே துறை இதுபோன்ற பிரச்னைகளை களைந்து, பயணிகள் நல்ல முறையில் பயணம் செய்ய வசதிகளை ஏற்படுத்த முன்வர வேண்டும்’ என்றனர்.

The post சென்னை ரயிலின் ஏசி பெட்டியில் மழைநீர் கொட்டியதால் பரபரப்பு: பயணிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nagercoil ,Ananthapuri ,Trichy ,Madurai ,Tirunelveli ,Kulithura ,Trivandrum ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை!