×

வ.உ.சி-யின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, வ.உ.சி-யின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் 05.09.2023 அன்று காலை 10.15 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்கள்.

டாக்டர் ப. சுப்பராயன் அவர்கள் திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இவர் வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர். சட்டமன்ற மேலவை உறுப்பினர். இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற எண்ணற்ற பதவிகளை வகித்து, நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கினார்.

மேலும், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் டாக்டர் ப. சுப்பராயன் அவர்கள் பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில், முதல்முறையாக அரசாங்க பணிகளில் தலித்துக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் வகுப்புவாரி பிரநிதித்துவ அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை – பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 05.09.1872ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்விப் படிப்பை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியை திருச்சியிலும் பயின்று 1894 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார். மேலும், சமூக சேவையிலும் அரசியல் பணியிலும் படிப்படியாகத் வ.உ.சிதம்பரனார் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்

தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை. அடியோடு ஒழித்திட அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.

வ.உசிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 1908ஆம் ஆண்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்டார்.

தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழி தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத தாகத்தின் காரணமாக பல அரிய நூல்களையும், சுயசரிதையையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில், 1975 முதல் 1976 வரை தூத்துக்குடியில் கட்டிமுடிக்கப்பட்ட 4 கப்பல் தளங்களுக்கு செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. 1998ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய 16 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், அன்னாரின் 150-வது பிறந்த நாளில் முத்தான 14 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நம் தேசத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும். தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மேயர், அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்

The post வ.உ.சி-யின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : C. ,Thiruvuruva ,First Man ,BC ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Dr. ,P. Suparayan ,Thiruva ,. U. ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!