×

கோவை அதிமுக எம்எல்ஏ மகன் உயிரிழப்பு

 

கோவை, செப். 4: கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ-வும், கோவை மாநகர மாவட்ட செயலாளராக இருப்பவர் அம்மன். கே.அர்ஜூனன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (39). இவர் கோவை மாநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவின் இணைச்செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

அதன் பின்னர் மீண்டும் அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு தீவிரமானது. இதனை தொடர்ந்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மதியம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுண்டாக்காமுத்தூர் ரோட்டில் உள்ள திருநகர் 3வது வீதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வீரகேரளத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறந்த கோபாலகிருஷ்ணனுக்கு கலைவாணி என்ற மனைவியும், 11 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர்.

The post கோவை அதிமுக எம்எல்ஏ மகன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,AIADMK ,Coimbatore North Constituency ,MLA ,Amman ,Coimbatore Municipal District ,AIADMK MLA ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...