×

பள்ளி மாணவ, மாணவிகளுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டரை பாராட்டி பிளக்ஸ்

 

திருப்பூர்,செப்.4: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் காரிங்கராயன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமையலர் தீபா சமைத்த உணவை சாப்பிடாமல் சிலர் புறக்கணித்தனர்.மேலும், அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழை தரும்படியும் கேட்டனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, 100 சதவீதம் மாணவ-மாணவிகள் காலை உணவை உண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் ஈ.பி.சரவணன் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தார்.

இது தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை அனுப்பி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் கிறிஸ்துராஜுன் சமந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அந்த குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டார். அதன் தொடர்ச்சியாக மாணவ-மாணவிகள் பள்ளிகளில் காலை உணவை சாப்பிட்டனர்.

இந்த பிரச்னைக்கும் உரிய தீர்வு காணப்பட்டது. மேற்படி பள்ளியில் சமையலர் தீபா தான் பணியாற்றி வருகிறார். அவருக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு, சமூக ஆர்வலர்களான ஈ.பி.சரவணன்,கே.ஏ.கே (எ) கிருஷ்ணசாமி,ஆண்டிபாளையம் ரவி ஆகியோர் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து கலெக்டரின் நடவடிக்கையை பாராட்டி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

The post பள்ளி மாணவ, மாணவிகளுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டரை பாராட்டி பிளக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Vallipuram Karingarayanpalayam ,Perumanallur, ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...