×

மெரினாவில் 10 ஆண்டாக மது விற்ற பெண்ணுக்கு நடமாடும் டிபன் கடை அமைத்து கொடுத்து நல்வழிப்படுத்திய ஐஸ்அவுஸ் போலீசார்: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு

 

சென்னை, செப்.4: மெரினா பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்து வந்த பெண்ணை, ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் நல்வழிப்படுத்தி, அவருக்கு நடமாடும் டிபன் கடை அமைத்து கொடுத்த சம்பவம் பலரது பாராட்டை பெற்றுள்ளது. சென்னை ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்தவர் பாலம்மாள் (42). இவர், டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி, பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் மெரினா கடற்கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தார்.

இதுதொடர்பாக, இவர் மீது ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. பலமுறை கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த வழக்கில் பாலம்மாள் கைது செய்யப்பட்டாலும், அவர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மதுபானம் விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில், ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணராஜ், பாலம்மாளை நேரில் அழைத்து, ‘‘பலமுறை உன்னை மதுபானம் விற்ற வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தும், எதற்காக தொடர்ந்து இதை செய்து வருகிறாய்,’’ என கேட்டுள்ளார்.

அதற்கு பாலம்மாள், ‘‘எங்கு சென்று கேட்டாலும், யாரும் வேலை கொடுப்பதில்லை. சாப்பாட்டிற்கு வேறு வழியில்லை. அதனால் தான் மதுபாட்டில் விற்கிறேன்,’’ என கூறியுள்ளார். அதற்கு, ‘‘இதுபோன்று சட்ட விரோத செயலில் ஈடுபடுவதால் ஒருநாளும் நிம்மதியாக வாழ முடியாது. உனக்கும், உனது குடும்பத்திற்கும் சமூகத்தில் கெட்ட பெயர் ஏற்படும். எனவே, ஏதாவது உனக்கு தெரிந்த வேறு ஏதாவது தொழில் அமைத்து கொடுத்தால், மது பாட்டில் விற்காமல் இருப்பாயா,’’ என இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார்.

அதற்கு பாலம்மாள், ‘‘எனக்கு டிபன் கடை அமைத்து கொடுத்தால், இனி நான் மதுபாட்டில் விற்பனை செய்ய மாட்டேன்,’’ என்று கூறியுள்ளார். அதைதொடர்ந்து ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் இணைந்து, நடமாடும் டிபன் கடை அமைத்து தர ஏற்பாடுகள் செய்தனர். மேலும், அதற்கு தேவையான மூன்று சக்கர சைக்கிள், காஸ் ஸ்டவ், அரிசி, பருப்பு மற்றும் பாத்திரங்கள், மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி, பாலம்மாள் மற்றும் அவரது மகள் பவானியிடம் கொடுத்துள்ளனர்.

அதன்பிறகு பாலம்மாள், ‘‘இனி நான் எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன். டிபன் கடை மூலம் நான் உழைத்து சாப்பிடுவேன்,’’ என்று போலீசாரிடம் உறுதி அளித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மதுபாட்டில் விற்று வந்த பெண் ஒருவரை நல்வழிப்படுத்தி, அவருக்கு டிபன் கடை அமைத்து கொடுத்த ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் மற்றும் போலீசாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post மெரினாவில் 10 ஆண்டாக மது விற்ற பெண்ணுக்கு நடமாடும் டிபன் கடை அமைத்து கொடுத்து நல்வழிப்படுத்திய ஐஸ்அவுஸ் போலீசார்: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Sandeep Roy Rathore ,Icehouse police ,Marina ,Chennai ,Iceaus ,
× RELATED சினிமா பிரபலங்கள், பொதுமக்கள்...