×

கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் எதிரில் வேன் மோதி அண்ணன் – தம்பி பலி: அரசு பேருந்து டிரைவர் கைது

 

கூடுவாஞ்சேரி, செப். 4: கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி, சிவாஜி நகர், 4வது தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன் (55). இவர், வல்லாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி கஸ்தூரி, மகன்கள் அருண்ராஜ் (31). சுகுமார் (30), தங்கராஜ் (28) ஆகியோர் உள்ளனர். இதில், அண்ணன் தம்பிகளான அருண்ராஜ், தங்கராஜ் இருவரும் அவரது தாய் மாமா பாபுவுடன் சேர்ந்து சென்னை கிண்டி அடுத்த ஈக்காட்டுத்தாங்கலில் லேத் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில், அருண்ராஜ் தனது மனைவி நந்தினிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை மெடிக்கல் ஆய்வகத்தில் எடுத்திருந்த டெஸ்டை அவரது உறவினர் மூலம் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திற்கு சென்று வாங்கி உள்ளார். அதன்பிறகு, தனது பைக்கில் அருண்ராஜ், அவரது தம்பி தங்கராஜை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு கூடுவாஞ்சேரியில் இருந்து மின் வாரியம் அலுவலகம் எதிரே உள்ள சாலை வளைவில் திரும்பி வருவதற்காக சென்றனர்.
அப்போது, கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் பேருந்து நிலையம் எதிரே முன்னாள் சென்ற அரசு பேருந்து ஒன்று நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக்கொண்டிருந்தது.

இதில், பைக்கில் சென்ற அண்ணன், தம்பிகள் அரசு பேருந்து பின்னால் பைக்கை நிறுத்தி காத்துக் கொண்டிருந்தனர். இதில், இவர்களது பின்னால் அதிவேகமாக வந்த டெம்போ டிராவல் பைக் மற்றும் அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில், அண்ணன் தம்பிகளான தங்கராஜ் மற்றும் அருண்ராஜ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து பிரிவு புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்றனர்.

ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருவரும் இறந்து விட்டதாக கூறினர். பின்னர், இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போக்குவரத்து பிரிவு புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வேன் டிரைவர் சுதாகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், நடுரோட்டில் அரசு பேருந்து நிறுத்தி பயணிகளை இறக்கி விட்ட உத்திரமேரூர் அடுத்த மானாமதியை சேர்ந்த அரசு பேருந்து டிரைவர் லட்சுமணன் (42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் பெரும் பரபரப்பும், கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மேலும், விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி பலியான சம்பவம் வல்லாஞ்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

*நடுரோட்டில் பேருந்தை நிறுத்துவதால் தொடரும் விபத்து
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டும், பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி சொல்வதில்லை. இதேபோல், பேருந்து நிலையம் எதிரே உள்ள செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மார்க்கத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை இல்லாததால் நடு ரோட்டிலேயே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி வருகின்றனர்.

இதில், வெயில் மற்றும் மழைக்காலங்களில் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக பயணிகளும் நடுரோட்டில் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால், இப்பகுதியில் இதுபோன்று தொடர்ந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதே கிடையாது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.

The post கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் எதிரில் வேன் மோதி அண்ணன் – தம்பி பலி: அரசு பேருந்து டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kuduvanchery ,Arjunan ,4th Street, Shivaji Nagar, Kuduvancheri ,Vallancheri ,Guduvancheri ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...