×

வரத்து அதிரிப்பால் மீன்கள் விலை சரிவு: அசைவப்பிரியர்கள் மகிழ்ச்சி வேலூர் இறைச்சி மார்க்கெட்டுக்கு

வேலூர், செப்.4: வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து அதிகரித்து, அவற்றின் விலையும் குறைந்துள்ளதால் அசைவப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் இறைச்சி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு, கார்வார் போன்ற இடங்களில் இருந்து மீன் வரத்து உள்ளது. வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீன் பிடி தடைகாலம் முடிந்த நிலையிலும், கர்நாடகா, கேரளாவில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை மீன்பிடி தடைகாலமாக இருந்தது. இந்த நிலையில் அங்கும் மீன்பிடி தடைகாலம் முடிவுக்கு வந்த நிலையில் மீன் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் நேற்று மீன்களின் விலையில் சரிவு காணப்பட்டது. அதன்படி, நேற்று வஞ்சிரம் கிலோ ₹900 முதல் ₹1,200 வரையும், சின்ன வஞ்சிரம் ₹400 முதல் ₹500 வரையும் விற்றது. சீலா கிலோ ₹350, தேங்காய்பாறை கிலோ ₹450, இறால் கிலோ ₹350 முதல் ₹550 வரையும், நண்டு கிலோ ₹400 வரையும் விற்றது. சங்கரா ₹150 முதல் ₹300க்கும், நெத்திலி ₹200க்கும், கட்லா ₹120க்கும், மத்தி ₹120க்கும், மத்தி ₹140, வவ்வால் ₹450க்கும், டேம் வவ்வால் ₹150க்கும், அயிலா ₹180க்கும், முரல் ₹350க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் 4 லோடு மீன்களின் வரத்து அதிகரிப்பால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை குறைவால் அசைப்பிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

The post வரத்து அதிரிப்பால் மீன்கள் விலை சரிவு: அசைவப்பிரியர்கள் மகிழ்ச்சி வேலூர் இறைச்சி மார்க்கெட்டுக்கு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore… ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்