
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘மழைக்கால நோய்’களை தடுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை இருக்கும். இந்த மழைக்காலத்தில் பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், உடைந்து போன மண், பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் தெருவில் வீசப்படும் டயர்களில் மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகிறது. இந்த கொசுவால் டெங்கு, சிக்குன் குனியா மற்றும் மலேரியா உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகிறது.
எனவே கொசு உற்பத்தியை தடுக்க அரசு,மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், சுகாதார துணை இயக்குனர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு பொது சுகாதார துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், மின்சாரம் தடை ஏற்படாமல் இருக்க போதுமான எரிபொருள் விநியோகத்துடன் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். மழைநீர் வடிகால் அடைப்பை தவிர்க்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குப்பைகள் தேங்காமல் அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
கழிவு நீரை முறையாக அப்புறப்படுத்தி சுகாதார பிரச்சினைகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய் வர வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நோய்கள் பரவாமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது சுகாதாரத்துறை உயர் அதிகாரி கூறியதாவது: பருவமழை தொடங்குவதால் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் மழை கால நோய் பாதிப்பு அதிகரிக்கும். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சளி , டெங்கு, மலேரியா, டைப்பாய்டு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
*தற்காத்து கொள்வது எப்படி?
கொதித்து ஆற வைத்த நீர் குடிக்க வேண்டும். பழங்களை நன்றாக கழுவிய பிறகே சாப்பிட வேண்டும், சூடான உணவு வகைகள் காய்கறி சூப் எடுத்து கொள்ளவேண்டும், வைட்டமின் ‘சி’ நிறைந்த சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை ஜூஸ் எடுக்கலாம். குளிர்ந்த பானம், பழைய சாதம் மற்றும் பழைய உணவுகள், ஐஸ்கிரீம் வகைகள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
The post பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக மழைக்கால நோய்களை தடுக்க தீவிர கண்காணிப்பு: பொதுசுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.