×

நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்கு முன் நாளை இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம்: காங். தலைவர் கார்கே அழைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பாக நாளை இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்தும் ஒரே நோக்கத்துடன் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, சிவசேனா உத்தவ் தாக்கரே அணி உள்ளிட்ட முக்கிய எதிர்க் கட்சிகள் இந்தியா கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளன.

இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருவதால் அச்சம் அடைந்துள்ள மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் கேள்வி நேரம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூட்டத்தொடருக்கும், அதில் கேள்வி நேரம் நீக்கப்பட்டதற்கும் இந்தியா கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய பாஜ அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களின் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கேவின் ராஜாஜி மார்க் இல்லத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வை எதிர்கொள்வது, மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்கு முன் நாளை இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம்: காங். தலைவர் கார்கே அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Parliament ,India Coalition Party ,Kong ,Carke ,New Delhi ,Congressional ,President ,India Alliance Party ,Session ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க...