×

லாலுவுடன் சேர்ந்து ‘மட்டன்’ சமைத்த ராகுல்: ருசித்து சாப்பிட்டார் பிரியங்கா

புதுடெல்லி: டெல்லியில் லாலுவுடன் சேர்ந்து ராகுல் காந்தி மட்டன் சமைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடன் சேர்ந்து ஆட்டிறைச்சி சமைத்தார். இதுதொடர்பான வீடியோவை ராகுல் காந்தி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். முன்னதாக லாலுவின் டெல்லி வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தியை பூங்கொத்து கொடுத்து லாலு வரவேற்றார். அப்போது லாலு, ‘வாருங்கள்… சந்தோஷமான நாட்கள் வந்துவிட்டன’ என்றார்.

தொடர்ந்து, பீகாரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆட்டிறைச்சியில் சம்பரான் மட்டன் செய்முறை குறித்து ராகுல் காந்தியிடம் லாலு எடுத்து கூறினார். பின்னர் அனைத்து மசாலாப் பொருட்களையும், ஆட்டிறைச்சியில் வைத்து ராகுல் காந்தி தனது கைகளால் கலந்தார். அப்போது லாலுவின் மகளும் எம்பியுமான மிசாபாரதியும் ராகுல் காந்திக்கு உதவி செய்தார். லாலுவிடம், முதன்முறையாக எப்போது ஆட்டிறைச்சி சமைக்க கற்றுக்கொண்டீர்கள் என்று ராகுல் கேட்டார். இதற்கு லாலு, ‘நான் 7வது வகுப்பு படிக்கும் காலத்திலேயே சமைக்க கற்றுக் கொண்டேன்’ என்றார். எந்த நாட்டின் உணவு உங்களுக்கு பிடிக்கும்? என்று லாலுவிடம் ராகுல் கேட்டார். அதற்கு லாலு, ‘எனக்கு தாய்லாந்து உணவு பிடிக்கும்’ என்றார். இந்த உரையாடலின் போது ராகுல் காந்தி கூறுகையில், ‘எனது சகோதரி (பிரியங்கா) தனக்கும் கொஞ்சம் சம்பரான் மட்டன் எடுத்து வரச் சொன்னார்’ என்றார். அதன்பின் லாலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி இரவு உணவு சாப்பிட்டார்.

அப்போது ராகுலிடம் உங்களுக்கு சமையல் தெரியுமா? என்று லாலு கேட்டார். அதற்கு அவர், ‘ஆம், ஐரோப்பாவில் இருக்கும் போது சமையல் கற்றுக்கொண்டேன். ஆனால் சமையல் நிபுணர் அல்ல’ என்றார். ெதாடர்ந்து இருவரும் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினர். ராகுல் காந்தி பேசுகையில், ‘பாஜவினர் மக்களிடையே வெறுப்பை பரப்புகிறார்கள், இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார். அதற்கு லாலு, ‘அரசியல் பசி தான் காரணம்’ என்றார். எங்களைப் போன்ற அடுத்த தலைமுறை தலைவர்கள், உங்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? என்று லாலுவிடம் ராகுல் கேட்டார்.

இதற்கு பதிலளித்த லாலு, ‘உங்கள் பெற்றோரும், தாத்தா, பாட்டிகளும் நாட்டுக்கு ஏற்படுத்திக் கொடுத்த புதிய பாதையை மறந்துவிடக் கூடாது. முற்போக்கான மற்றும் நேர்மறையான அரசியல் செய்ய வேண்டும். நாட்டின் வரலாறும் அழகும் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றார். அந்த வீடியோவின் முடிவில், ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்காவுக்கு லாலு வீட்டில் இருந்து ஆட்டிறைச்சி உணவு கொண்டு சென்றதாக காட்டப்பட்டது. அந்த உணவு ருசியாக இருந்ததாக பிரியங்காவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The post லாலுவுடன் சேர்ந்து ‘மட்டன்’ சமைத்த ராகுல்: ருசித்து சாப்பிட்டார் பிரியங்கா appeared first on Dinakaran.

Tags : Rahul ,Lalu ,Priyanka ,New Delhi ,Rahul Gandhi ,Mutton ,Delhi ,Congress ,
× RELATED இப்போது இருந்தால்...