×

வீட்டின் அருகே மது அருந்தியதை கண்டித்ததால் 2 பெண்கள் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை: பல்லடம் அருகே பயங்கரம்

பல்லடம்: வீட்டின் அருகே மது அருந்தியதை கண்டித்ததால் 2 பெண்கள் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் (ஜோசியர் தோட்டம்) என்ற பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (47). இவர் தவிடு, புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு இவரது வீட்டிற்கு அருகே அமர்ந்து ஒருவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. எதற்காக எங்களது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்துகிறீர்கள்? என செந்தில்குமார் கேட்டுள்ளார்.

ஆத்திரம் அடைந்த அந்த நபர் செந்தில்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். சத்தம் கேட்டு செந்தில்குமாரின் வீட்டின் அருகே இருந்த அவரது தம்பி மோகன்ராஜ் மற்றும் செந்தில்குமாரின் சித்தி ரத்தினம்பாள், மோகன்ராஜ் தாய் புஷ்பவதி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டியவரை தடுக்க முயன்றனர். அப்போது அவர்களையும் அந்த நபர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் டிஎஸ்பி சவுமியா தலைமையிலான போலீசார் வெட்டுப்பட்டு உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்டு தற்போது பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, வெட்டிய நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேரின் உடலையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளி யார்? ஏற்கனவே செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் கொலையாளிக்கும் முன்விரோதம் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டின் அருகே மது அருந்தியதை கண்டித்ததால் 2 பெண்கள் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை: பல்லடம் அருகே பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Palladam ,
× RELATED ஆலுத்துபாளையத்தில் குடிநீர் விநியோக துவக்க விழா