×

14 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கம்: இன்று கோபுரங்களுக்கு பாலாலயம்

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலய பூஜை தொடங்கியது. இன்று கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த 8.4.2009ல் நடந்தது. தற்போது 14 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் விரைவில் துவக்கப்படுமென ஆய்வுப்பணியின் ேபாது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதையடுத்து கும்பாபிஷேக திருப்பணிகளை துவக்குவதற்கான ஆயத்தப் பணிகளை கோயில் நிர்வாகம் செய்து வந்தது. கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக முதற்கட்டமாக கோயிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு உள்ளிட்ட ஒன்பது நிலை மற்றும் ஏழுநிலை கோபுரங்கள் என 5 கோபுரங்களுக்கு இன்று (செப்.4) பாலாலயம் நடைபெறுகிறது. முன்னதாக, நேற்று காலை 8.30 மணி முதல் 11 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், ரஷாபந்தனம், கும்பாலங்காரம், ராஜகோபுரங்கள் கலாகர்ஷணம், முதற்கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.

இன்று காலை 7.15 மணி விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு, காலை 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் சுவாமி கோயிலில் ராஜகோபுர பாலஸ்தாபனம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.

The post 14 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கம்: இன்று கோபுரங்களுக்கு பாலாலயம் appeared first on Dinakaran.

Tags : Madurai Meenatsiyamman ,Temple ,Kumbabisheka Tirupani ,Madurai ,Kumbabisheka Tirupanites ,Meenatsiyamman Temple ,Madurai Meenatsiyamman Temple ,Kumbabisheka ,Tirupupmani ,
× RELATED வார விடுமுறை முடிந்து சென்னை...