×

சென்னை ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 2 அதிமுக நிர்வாகிகள் கைது: 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

சென்னை: கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் இருப்பதால் கைதானவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடந்த 18ம் தேதி பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிரபல ரவுடி பாம் சரவணன் சகோதரர் தென்னரசு கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. கொலை நடந்த மறுநாளே அரக்கோணம் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி ஆகிய மூன்று பேர் வழக்கறிஞர் மூலம் மயிலாப்பூர் போலீசாரிடம் சரணடைந்தனர்.

அதேபோல நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த ரவுடிகள் செந்தில்குமார் முத்துக்குமார், அரக்கோணம் மோகன், நவீன், போஸ், சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த ரவுடி எட்வின் உள்ளிட்டோர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 11 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த அதிமுக 111வது வட்டச் செயலாளர் சுதாகர் மற்றொரு அதிமுக நிர்வாகி ஜான் கென்னடி ஆகிய இருவருக்கும் ஆற்காடு சுரேஷ் வழக்கில் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கிழக்கு கடற்கரை சாலை பகுதி பங்களாவில் பதுங்கி இருந்தவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் ஜான் கென்னடி பிரபல ரவுடியாக இருந்துள்ளார். பின்னர் நன்னடத்தையின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ரவுடி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜான் கென்னடி தான் ரவுடி ஆற்காடு சுரேசை கொலை செய்ய நெல்லையிலிருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அரக்கோணம் ஜெயபால் தற்போது கைதான அதிமுக நிர்வாகிகள் இருவருக்கும் நெருங்கிய உறவினர் என போலீசார் கூறினர்.

கைது செய்யப்பட்ட 2 அதிமுக நிர்வாகிகளை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணைக்கு பிறகு தான் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என கூறப்படும் பாம் சரவணன் குறித்த தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் நேற்று வரை 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் ஆற்காடு சுரேஷ் கொலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 2 அதிமுக நிர்வாகிகள் கைது: 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : 2 AIADMK ,Ayalan Lamp ,Chennai ,Arkadu Suresh ,Ayad Lamp ,Artgad Suresh ,Argad Suresh ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூரில் தேர்தல் பிரசார...