×

தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் உள்ள ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் 600 ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது: ஆசிரியர் தினத்தன்று கவுரவிப்பு

தமிழகத்தில் 1865ம் ஆண்டு முதன்முதலாக துவங்கப்பட்ட நகராட்சி வாலாஜா. தொடர்ந்து ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா நகராட்சியில் முதன்முதலாக கடந்த 1867 ஏப்ரல் 15ம் தேதி அரசு பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் உலக தத்துவஞானியும், முன்னாள் இந்திய குடியரசு தலைவருமான ராதாகிருஷ்ணன், தமிழ் மூதறிஞர் மு.வ. என்கிற மு.வரதராசனார், முன்னாள் தலைமை செயலாளரும் மிசோரம் மாநில ஆளுநராக இருந்தவருமான பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத், ஐ.ஏ.எஸ் அதிகாரி வன்னிவேடு விசுவநாதன் உள்ளிட்ட சாதனையாளர்கள் பலர் கல்வி பயிறுள்ளனர்.

வாலாஜாவில் தமிழ் மற்றும் சவுராஷ்டிரா, தெலுங்கு, கன்னடம், மராட்டியம், உருது உள்ளிட்ட மொழிபேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். நகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் அந்நாளில் மிக தரம் உயர்ந்த பர்மா தேக்கினால் மேல்தளம் மாடி படிக்கட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1920ல் சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும், கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சார்யா முயற்சியால் எச் வடிவில் இந்த பள்ளிக்கூடத்திற்கு பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டது. சுதந்திரம் கிடைத்த பிறகு 1949ல் இந்த பள்ளிக்கூடத்திற்கு நடுநாயகமாக தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு, தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதனை ஒட்டினாற் போல் இந்தியா வரைபடம் பூமியில் சிமென்ட்டால் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டது. தற்போது அவை சிதிலமடைந்து உள்ளது.

கடந்த 1956ல் அப்போதைய முதல்வராக இருந்த எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் கூடுதலாக ஒரு வகுப்பறை கட்டிடமும் அதனை தொடந்து அதே ஆண்டு முதல்வர் பக்தவத்சலம் மற்றொரு கட்டிடமும் திறந்து வைத்தனர். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த பள்ளிக்கூடம் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருக்கிறது. ஆனாலும் புராதனமான பல கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்துள்ளது. தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டாலும் கல்வி தரத்தில் மாணவர்களின் எண்ணிக்கையில் பின்தங்கியுள்ளது வேதனை அளிப்பதாக முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் செப்டம்பர் 5ம் தேதி 1888ம் ஆண்டு பிறந்தவர் ராதாகிருஷ்ணன். தனது தாய்வழி மாமா வீடான வாலாஜாவில் தங்கி ஆரம்ப கல்வியை படித்தவர். 120 ஆண்டுகள் கடந்து அந்த பள்ளிக்கூடம் இன்றும் அவருடைய பெருமையை எடுத்துகாட்டுகிறது. இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகியவற்றில் புலமை பெற்றவர். ஆங்கில மொழியால் உலகத்தையே அசத்தியவர். தத்துவம், ஆன்மிகம், சனாதன இந்து தர்மம் ஆகியவற்றில் 600க்கும் மேற்பட்ட புத்தகங்களை படைத்தவர். பாரத ரத்னா விருது பெற்ற ராதாகிருஷ்ணன், பாரத தேசத்தின் 2வது குடியரசு தலைவராக பணியேற்று பெருமை சேர்த்தவர். அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி(நாளை) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலக தரமான மாணவர்களை உருவாக்கும் பணியில் ஆசிரியர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

எனவே ஆசிரியர் தினமான நாளை இந்த பள்ளிக்கூடத்தில் மாவட்டத்தில் உள்ள 600 ஆசிரியர்களை நேரில் அழைத்து அவர்களை பாராட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவு விருதுகளை வழங்க முன்னாள் மாணவர்கள், மாவட்ட கல்வித்துறை இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் அவரது பெருமைகளை எடுத்துக்கூறி இதற்காக மிகப்பெரிய விழா எடுக்கவும், தொடர்ந்து இந்த பள்ளிக்கூடத்தை சீரமைத்து ராதாகிருஷ்ணன் மற்றும் மு.வ சிலை அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

The post தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் உள்ள ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் 600 ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது: ஆசிரியர் தினத்தன்று கவுரவிப்பு appeared first on Dinakaran.

Tags : Radhakrishnan's school ,Walaja, Tamil Nadu ,Teachers' Day ,Walaja ,Tamil Nadu ,North Arcot ,
× RELATED அறிவு பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட...