×

ஏரி மண் அள்ளுவதை தடுத்த மக்களுக்கு கொலை மிரட்டல்; அதிமுக ஊராட்சி தலைவர் கைது

வாலாஜா: வாலாஜா அருகே ஏரி மண் அள்ளுவதை தடுத்த பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த செங்காடு மோட்டூர் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து மண் அள்ளுவதற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் முயற்சித்துள்ளது.
ஏற்கெனவே அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஏரி மண் அள்ளுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 1ம் தேதி ஏரியில் மண் அள்ளுவதற்கு வந்த ஜேசிபி வாகனத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் செய்தனர். இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு செங்காடு மோட்டூர் மற்றும் தகரக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட 4 பேர் கொலை மிரட்டல் விடுத்ததாக, போராட்டத்தை முன்னின்று நடத்திய பாலாஜி (38), வரதராஜி (53) ஆகியோர் வாலாஜா போலீசில் நேற்று புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அதிமுகவை சேர்ந்த தகரக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார்(45), செங்காடு மோட்டூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மனோஜ்குமார்(37) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார்(35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள செங்காடு ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post ஏரி மண் அள்ளுவதை தடுத்த மக்களுக்கு கொலை மிரட்டல்; அதிமுக ஊராட்சி தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Walaja ,panchayat ,Dinakaran ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்