சென்னை: அவதூறு பரப்பிய பாஜ பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் தாலுகா பெருஞ்சுனையை சேர்ந்தவர் அண்ணாதுரை. திமுக மாவட்ட மாணவர்அணி அமைப்பாளர். நேற்றுமுன்தினம் கோட்டைபட்டினம் சந்தனக்கூடு திருவிழாவுக்கு வந்து இருந்த அண்ணாதுரை,முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்து விமர்சிக்கும் நோக்கத்தில் வசனங்கள் பதிவேற்றம் செய்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில், அந்த நபர் அரசர்குளம் கீழ்பாதி பகுதியை சேர்ந்த பாஜ தொழில்நுட்பபிரிவு கிழக்கு மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் (27) என்பது தெரியவந்தது.
இந்நிலையில் நாகுடி கூகனுர் செல்லும் சாலையின் ஓரத்தில் கமலக்கண்ணன் நின்று கொண்டிருந்தபோது ஏன் இப்படி முதல்வர் குறித்து விமர்சிக்கும் நோக்கத்தில் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்தீர்கள் என்று அண்ணாதுரை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் கமல்கண்ணன், அருகே கிடந்த கட்டையை எடுத்து அண்ணாதுரையை தாக்கியதுடன் ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை நேற்று கைது செய்தனர்.
நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வழி தர்மகர்த்தா பாலபிரஜாபதி அடிகளார் பற்றி, சமூகவலைதளங்களில் மார்த்தாண்டம் அருகே விரிகோடை சேர்ந்த பாஜ தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் உமேஷ், அவதூறு பதிவுகள் வெளியிட்டிருந்தார். இதுபற்றி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயமோகன் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவதூறு கருத்துகளை பதிவு செய்தல், சமூகத்தினரிடையே வெறுப்பை உருவாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து உமேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
The post அவதூறு கருத்து; பாஜ பிரமுகர்கள் கைது appeared first on Dinakaran.
